டெல்லி: எதிர்க்கட்சியினிரன் அமளி காரணமாக,  பாராளுமன்ற மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக ராஜ்யசபா தலைவர்  வெங்கையா நாயுடு அறிவித்து உள்ளார். முன்னதாக இன்று ஒரேநாளில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி தொடங்கியது.  விடுமுறையின்றி, அக்டோபர் 1ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, சபைகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையில், மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா உள்படபல மசோதாக்களுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவையில் அமளி துமளி ஏற்பட்டது. அதுமட்டுமின்றி,  25க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து விட மத்திய அரசு திட்டமிட்டது. இந்த நிலையில், அமளி காரணமாக 8 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  இதை ரத்து செய்ய வண்டும் என்றும்,   சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறும் வரை அவைக்கு வரப்போவதில்லை என்று எதிர்கட்சியினர் ராஜ்யசபாவிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, பா.ஜ., எம்.பி.,க்கள், அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி என மத்திய அரசுக்குப் பல்வேறு நிகழ்வுகளில் ஆதரவு கொடுத்துவரும் கட்சிகளின் எம்.பி.,க்கள் மட்டுமே இருந்தநிலையில், இன்று காலை சபை நடவடிக்கையின்போது, சுமார் மூன்றரை மணி நேரத்தில் 7 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து, இன்றுடன் (செப்.,23) கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.  தொடர்ந்து பேசியவர், போராட்டம் செய்ய எதிர்க்கட்சிகளுக்கு உரிமையுள்ளது. ஆனால், விதிகளுக்கு உட்பட்டுத்தான் போராட்டம் நடத்த வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாதபோது மசோதாக்களை நிறைவேற்ற விருப்பமில்லை. ஆனால், தற்போது அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும், 10 நாட்கள் நடைபெற்ற இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 25  மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 6 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.  198 உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளில்  தீவிரமாக பங்கேற்றதாகவும் 1,567 கேள்விகளுக்கு பதிலளித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.