காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 25 பேர் பலி, ஏராளமானோர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

அந்நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில்  ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் நுழைந்தனர். தகவல் அறிந்த பாதுகாப்புப் படையினர் பல்கலைக்கழகத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. சில மணி நேரங்கள் இந்த துப்பாக்கிச்சண்டை நீடித்ததாக தெரிகிறது. தாக்குதலில் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாகவும் ஏனைய 2 பேர் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 22 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.