டெல்லி: டெல்லி காற்று மாசு குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனை கூட்டத்தில் கவுதம் கம்பீர் உள்ளிட்ட 25 எம்பிக்கள் கலந்து கொள்ளாதது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவு காற்று மாசு ஏற்பட்டுள்ளது. கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் சுவாசக் கோளாறால் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இதையடுத்து, மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இந்த கூட்டத்தில் 29 எம்பிக்களில் 25 எம்பிக்கள் கலந்து கொள்ளவில்லை.


அவர்களில் பிரபல கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீரும் ஒருவர். இந்தூரில் உள்ள கடை ஒன்றில் முன்னாள் வீரர் லக்ஷ்மண் உடன் ஜிலேபி சாப்பிட்டு ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இணைய தளத்தில் கம்பீரின் நடவடிக்கையை பலரும் விமர்சித்துள்ளனர். அவரை போன்று மேலும் 24 எம்பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.


பாஜக எம்பிக்கள் ஹேமா மாலினி,ஷங்கர் லால்வானி, பி.சி. மோகன், ராம் சரண் போஹ்ரா, காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன், முஸ்லீம் லீம் எம்பி இம்தியாஸ் ஜலீல் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்தின் தலைவர் ஜெகதாம்பிகா, சஞ்சய் சிங், மசூதி, சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல் ஆகிய 4 எம்பிக்களே பங்கேற்றனர். பெரும்பாலான எம்பிக்கள் வராததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. வரும் 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


எம்பிக்கள் கலந்து கொள்ளாதது குறித்து கூட்டத்தின் தலைவர் ஜெகதாம்பிகா ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இது குறித்து சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதப்படும் என்றும் கூறினார்.