வரும் கல்வி ஆண்டில் 25 புதிய அரசு தொடக்க பள்ளிகள்: முதல்வர் அறிவிப்பு

சென்னை:

மிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மேலும் 25 புதிய தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் விதி110-ம்  கீழ் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் மாநில கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தொடரின்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில்,  வரும் கல்வி ஆண்டில், 5 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். மேலும், 10 அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவைப்படும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். மேலும், தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.

வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.26.25 கோடி செலவில் செய்து கொடுப்பதுடன், தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 9 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.55.50 கோடி செலவிலும் தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ரூ.21.36 கோடி செலவிலும் ஏற்படுத்தப்படும்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், தமிழ்நாட்டில் முதற்கட்டமாக, 1,890 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.