வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட 25 ஏழை நாடுகளுக்கு உடனடியாக கடனுதவி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்).

உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸால், இதுவரை உலகளவில் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக இருக்கும் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா கூறுகையில், “கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு கடனுதவி அளிப்பதற்கான நிர்வாக வாரிய கூட்டம் நடந்தது. இதில் ஐஎம்எஃப் அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள 25 ஏழை நாடுகளுக்கு கடனுதவி வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இக்கடனுதவியானது, சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைக்கப்பட்ட பேரழிவு கட்டுப்பாடு மற்றும் நிவாரண அறக்கட்டளையின் கீழ் வழங்கப்பட உள்ளது.

கடனுதவி பெற்ற நாடுகள், அத்தொகையை கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் அவசர மருத்துவ மற்றும் நிவாரண பணிகளுக்கும் பயன்படுத்தும்” என்று அவர் கூறினார்.