5ஆண்டுகளில் 25ஆயிரம் ‘ஷாகா’க்கள்: தமிழகத்தில் தீவிரமாக ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ்….

மிழகத்தில் கால் பதிக்க எண்ணும் பாரதிய ஜனதா கட்சி, தனது வலதுசாரி சிந்தாந்தமான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மக்களிடையே பரப்புவதில் தீவிரம் காட்டி வருகிறது. சிறுவர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களிடையேயும், உடற்பயிற்சி, சமூக சேவை, சமுக நல்லிணக்கம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தங்களுடன் ரகசியமாக பயற்சிகளையும் நடத்தி வருவது அம்பலமாகி உள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.என்ற வலதுசாரி இயக்கம்தான் பாஜகவின் பின்புலம் என்பது அனைவரும் அறிந்ததே. அதுதான், பாஜகவின் தலைவரையும், நாட்டின் பிரதமராக மோடியையும் தேர்வு செய்துள்ளது.  நாட்டின் இரண்டாவது அதிகார மையமாக செயல்படுகிறது என்பதையும் நாம் கண்கூடாக காண்கிறோம்.

பாரதியஜனதா கட்சி தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இதுவரை கால்பதிக்க முடியாத நிலையில், அதன் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் தனது தாய்கட்சியான ஆர்எஸ்எஸ் மூலம், தனது சிந்தாந்தத்தை மக்களிடையே வேரூன்ற செய்து வருகிறது.

நமது நாட்டில்,  கலாச்சாரமும்  சமூகமும்  பின்னிப் பிணைந்திருப்பதை புரிந்துகொண்ட  ஆர்எஸ்எஸ்,  அதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, செயல்பட்டு வருகிறது. ‘கலாச்சார இடத்தில் தங்களை எவ்வாறு  ஈடுபடுத்திக் கொள்வதுடன்,  அதை எவ்வாறு  தங்களுடையதாக்குவது, பின்னர் அவர்களின் கருத்துக்களை அந்த இடத்திற்குள் செலுத்துவது எப்படி என்பதை அவர்கள் கண்டறிந்து செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதிதான்,  ஆர்.எஸ்.எஸ்-ன் ஷாகாக்கள் எனப்படும் பயிற்சிக்கூடங்கள். இந்த பயிற்சி கூடங்கள்  தமிழகம் முழுவதும் பரவி உள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் அதிக அளவில் வேரூன்றி உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் கோவை, ஈரோடு, நீலகிரி போன்ற மாவட்டங்களில் அதன் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.

இதற்கிடையில்,  வேல் யாத்திரை போன்ற நடவடிக்கைகள் மூலம் பாஜக தனது  இருப்பை விரிவுபடுத்துவதற்கான  முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. அதன் ஒருங்கிணைந்த முயற்சிகள், ஆர்எஸ்எஸ்-ன் கருத்தியல் நீரூற்றை  மெதுவாக தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் ஊருவச் செய்துள்ளது.

தமிழகத்தில் வேகமாக வளர்ச்சியை அடைவதற்கும் ஒரு தமிழ் அடையாளத்தையும் தேர்ந்தெடுத்துள்ளது ஆர்எஸ்எஸ்.  அதற்காக, சமீபத்தில் ‘ தெய்வீக தமிழ் சங்கம்’  எனற அமைப்பையும் தொடங்கி உள்ளது. இது தமிழ்நாட்டிற்காக  பிரத்யேகமாக,  இங்குள்ள மக்களுடன் ஒரு நாட்டத்தை ஏற்படுத்துவதற்காக தமிழில் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சங்கம் மூலம் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.

“ஆர்எஸ்எஸ் அடையாளத்துடன் முந்தைய துண்டு பிரசுரங்களை வீட்டுக்கு வீடு வீடாக விநியோகிக்க நாங்கள் சென்றபோது எதிர்பார்த்த பதில் கிடைக்காததால், தற்போது புதிய முறையில் தனது சிந்தாந்ததைத் பரப்பத் தொடங்கி உள்ளது.

மேலும்,  மக்களிடையே, குறிப்பாக அதுவும் கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்களிடையே இலவசமாக உடற்பயிற்சி கற்றுத்தருவதாக கூறி, தனது சித்தாந்தத்தை வளர்த்து வருகிறது.

ஷாகாக்கள் என்பது என்ன?

சிறுவர்களிடையே உடற்பயிற்சி, சமூக சேவை, கல்வி ஆலோசனை என்ற பெயரில், அவர்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒரு முயற்சியே ஷாகா முகாம்கள். இதன்படி, அதிகாலையிலேயே எழுந்திருக்கச்செய்து, அவர்களுக்கு சில உடற்பயிற்சிகள் சொல்லிக்கொடுக்கப்பட்டு வருவதுடன், தியானம், சிலம்பம் உள்பட பல பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் தனது சிந்தாந்தங்களையும் போதித்து வருகிறது.

ஷாகாக்கள் என்பதற்கு அவர்கள் கூறும் தமிழ் மொழியாக்கம் பண்பு பயிற்சி. அதிகாலை 4.30 விழிக்க வேண்டும். யோகா, தியானம், உடற்பயிற்ச்சி, தற்காப்பு மட்டுமல்லாமல் இந்து மத கோட்பாடுகளை, சட்ட விதிகளை கற்றுக் கொள்வது, மதத்திற்கு எதிரான போக்குகளை கையாளும் விதம், இந்து மதத்தின் தனி தன்மையை காக்கும் பயிற்சி, இந்து அரசியல் வகுப்புகள் இப்படி பல பயிற்சி செயல்பாடுகள் இதில் உள்ளது

இந்த பயிற்சியில் நாட்டின் ஒற்றுமையை போதிப்பதாகவும், மக்களிடையே தேசப்பற்றை ஊட்டுவதாக கூறி, மதநல்லிணகத்துக்கு எதிரான கருத்துக்கள் போதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா இந்துக்களுக்கே என்பதுடன், பிஞ்சு மனதில் மதவெறியை பரப்பும் வகையிலும், சிறுபாண்மையினர்களுக்கு எதிரான கண்ணோட்டத்துடன்  போதனைகள்  நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சியின் விரிவாக்கம் ஆயுத பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற முகாம்கள்  மூலம் ஆர்எஸ்எஸ்  இந்தியா முழுவதும் பயிற்சிகள் அளித்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். நடத்தும் இந்த முகாம்களே ஷாகாக்கள் என்று அழைக்கப்படுகிறது.

பல இடங்களில், பொதுமக்கள் இதுபோன்ற ஷாகாக்களை நடத்த அனுமதி வழங்குவது கிடையாது. ஆனால், பாஜக அரசு பதவி ஏற்ற பிறகு, நாடு முழுவதும் ஷாகாக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் 4 நாட்கள் தேசிய மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. அப்போது நாடுமுழுவதும் இருந்து ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அங்கு முகாமிட்டிருந்தனர். அந்த மாநாட்டுக்கு பிறகு தமிழகம் முழுவதும் ஷாகாக்கள் அதிகரிக்கத்தொடங்கி உள்ளன. குறிப்பாக கொங்கு மண்டலத்தில்ஆர்.எஸ்.எஸ்.ன் வளர்ச்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .

இந்த ஷாக்க்களை  ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களான சேவா பாரதி மற்றும் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு போன்றவை நடத்தி வருகின்றன. மக்களிடையே உடற்பயிற்சி, யோகாசனம், கல்வி பயிற்சி என்ற பெயரில், தனது இத்துத்துவா சிந்தாந்தத்தையும் வளர்த்து வருகிறது. இதில் வலதுசாரிஅமைப்புகள் வெற்றிபெற்றுள்ளன என்பதையே அதன் வளர்ச்சி தெரிகிறது.

கோயம்புத்தூர்,  நீலகிரி மற்றும்  திருப்பூர் போன்ற கொங்கு மண்டலங்களில், தினமும் சுமார்  250 ஷாகாக்கள் நடைபெற்று வருவது தெரிய வந்தது. இந்த பகுதிகளில் உள்ள நகர்ப்புறங்களில் ஷாகாக்கள் நடைபெற்று வருவதும் அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக செயல்பட்டு வந்த ஷாகாக்கள் தற்போது  460ஆக உயர்ந்துள்ளது. 2015ல் நாள் ஒன்றுக்கு 800 பேர் ஷாகாக்களில் கலந்துகொண்ட நிலையில், தற்போதுநாள் ஒன்றுக்கு 1500 பேர் வரை கலந்துகொள்கின்றனர். கிராமப்புறங்களில் அதன் வளர்ச்சி வெகுவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு 10ஆயிரம் ஷாகாக்களை நடத்த திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ். தற்போது 25ஆயிரம் ஷாகாக்களை நடத்தி வருகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபோல, மாநிலம் முழுவதும்  நகர்ப்புறங்களில்  உள்ள ஷாகாக்களின் எண்ணிக்கை 1,355லிருந்து 2,060 ஆக உயர்ந்துள்ளது.

ஷாகாக்களில் பங்கு பெறுபவர்கள் யார் யார்?

ஆர்எஸ்எஸ் நடத்தும் ஷாகா முகாம்களில் பங்கேற்பாளர்களில் முதியவர்கள், பணிபுரியும் நடுத்தர வயது ஆண்கள், கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி 10 வயதிற்குட்பட்ட பள்ளி சிறுவர்கள்  அதிகமாகவே கலந்துகொள்கின்றனர். இந்துக்கள் அதிகம் வசிக்கும் கொங்கு மண்லத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் அதீத வளர்ச்சி அந்த பகுதியில் உள்ள அனைத்து கட்சியினருக்கும்  தெரிந்தே உள்ளது. ஆனால், அதை தடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

இந்தியாவை உலகின் குருவாக, அதாவது உலக நாடுகளுக்கு தலைமையாக  மாற்றுவதே தங்களது விருப்பம்”  என்ற சித்தாந்தம் அங்கு பயிற்சி பெறும் சிறுவர்களிடையே வேரூன்ற செய்யப்பட்டு  இருப்பது, அவர்களின் பேச்சு, நடவடிக்கைகள் மூலம் தெரிய வருகிறது. அந்த அளவுக்கு சிறுவர்கள்  மூளைச்சலவை செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான சிறுவர்கள், தங்களுக்கு தெரிந்தே இந்த பயிற்சியில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான சிறுவர்கள், நடுத்தர வயது உடையவர்கள்.  கடந்த 2018ம் ஆண்டு முதல் அதிக அளவில் ஷாகாவில் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருவதும், இந்த சிறுவர்கள் அனைவரும் பெற்றோர் சம்மதத்துடனேயே அதில் கலந்துகொள்கினற்னர், அதேவேளையில் பெரும்பாலோர் பாஜக பின்னணி இல்லாதவர்கள் என்பதும்   ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில்கூட உதகமண்டலம் உள்பட சில பகுதிகளில் புதியதாக ஷாகாக்கள் முளைத்துள்ளன.

கொரோனா பொதுமுடக்கம் காலக்கட்டங்களில், ஷாகாக்களில் பயிற்சி பெற்றவர்கள்,  நகரம் மட்டுமின்றி கிராமப்புறங்களுக்கும் சென்று, ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியதும், தொற்று பரவலில் இருந்து தடுக்கும் வகையிலான கபசுர குடிநீர் போன்றவற்றை விநியோகம் செய்வதில் தங்களை முன்னிலைப்படுத்தி உள்ளனர். இது மக்களிடையே  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற செயல்களால் மக்களால் கவரப்பட்டு, தனது வளர்ச்சியை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

இதனால், அதன் அமைப்புகளில் இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை பலர் ஆவலோடு இணைந்து வருகின்றனர். இதை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அதைக்கொண்டு அந்த பகுதிகளில் ஷாகாக்களை ஏற்படுத்தி தனது சிந்தாந்தத்தை பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.  தங்களது சித்தாந்ததை வேரூன்ற செய்கின்றனர்.

சமீபகாலமாக காதல் ஜிகாத் என்ற வார்த்தை பிரபலமாகி வருவதும், அதைவைத்து ஒருசிலர் செய்யும் அரசியல் நடவடிக்கைகளால் மக்களிடையே மதநல்லிணக்கம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதை நாம் அறிவோம்.  அதை, தனது ஆயுதமாகவும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக, ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது  ‘தெய்வீக தமிழ் சங்கம்’  எனற அமைப்பு மூலம், தமிழின் நற்பண்புகள், ‘மத மாற்ற அச்சுறுத்தல்’, ‘காதல் ஜிகாத்தின் ஆபத்து’ மற்றும் ‘இந்து மக்கள்தொகை வீழ்ச்சி’ பற்றிப் பேசும் ஒரு கோடி துண்டு பிரசுரங்களை அனைத்து பகுதிகளிலும் விநியோம் செய்து வருகின்றன. இதற்காக ஷாகா உறுப்பினர்களை கொண்டு வீடுவீடாக விநியோகமும் செய்து வருகிறது.  இதுவரை சுமார் 1 கோடி துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இதற்காக ஏராளமான வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி மாவட்ட அளவில் நிர்வகித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.தலைமை. ஒவ்வொரு பகுதியில் தினசரி எத்தனை ஷாகாக்கள் நடைபெற்றுள்ளன, அதில் எத்தனை பேர் கலந்துகொண்டுள்ளனர் என்ற விவகரங்களை சேகரிப்பதுடன், அதை தொடர்ந்து நடத்த மேலும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

கிராமங்களில் நடத்தப்படும் ஷாக்காகள், தொடக்கக் காலத்தில் அந்த பகுதி மக்களிடையே வித்தியாசமாக பார்க்கப்பட்ட நிலையில், தங்களது நடவடிக்கைகள் தற்போது அங்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக,  ஆர்.எஸ்.எஸ்ஸின் கோயம்புத்தூர்-நீலகிரி மண்டல இணை செயலாளர் சுரேஷ் பெருமிதமாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பெருமையாக கூறும் ஆர்.எஸ்.எஸ்ஸின் செக்ரியா கர்வாவா (தென்னிந்திய செயலாளர்) எஸ்.ராஜேந்திரன்,  நாங்கள்  செய்யும் சேவையின் காரணமாக இளைஞர்கள் எங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கையில் 30% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பெருமிதமாக தெரிவித்துள்ளார். மேலும், கேரளாவுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் ஷாகாக்களின் வளர்ச்சி குறைவு என்று ஆதங்கப்படுபவர்,  இங்குள்ள அரசியல் கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன,” என்று குற்றம் சாட்டுகிறார்.

ஆனால், ஆர்எஸ்எஸ் திட்டமிட்டே, தனது சித்தாந்ததை பல்வேறு வழிமுறைகள் மூலம் முன்னெடுத்து வருகிறது. மத்திய அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக சங்கல்ப் என்ற பெயரில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறது. அடித்தட்டு மக்களுக்கு இலவசமாக உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்,  இலவசமாக பயிற்சி அளிப்பதாக தெரிவித்து வருகிறது. கடந்த 1986ஆம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்ட சங்கல்ப் பயிற்சி நிறுவனம், தற்போது, நாடு முழுவதும் ஏராளமானபயிற்சி நிறுவனங்களை உருவாக்கி உள்ளது. இதன்மூலம், ஆண்டுதோறும் ஏராளமானோரை உயர் பதவியில் அமர வைத்துள்ளது.  நடப்பாண்டில் இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 61 சதவிகிதம் பேர், வெற்றி பெற்று சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாகியுள்ளனர். இதுவரை இங்கு பயிற்சி பெற்ற பல்லாயிரம் பேர் மத்தியஅரசு பணியில் இடம்பெற்றுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தால் உந்துதல் பெற்ற மையமாக செயல்பட்டு வருவதாக இதன்மீது குற்றச்சாட்டுக்கள் இருப்பதையும் யாரும்  மறந்து விட முடியாது.

அதன் எதிரொலிதான், தற்போது, மோடி தலைமையிலான மத்தியஅரசால்  கொண்டு வரப்பட்டுள்ள, தேசிய குடிமக்கள் பதிவேடு, புதியக் கல்விக்கொள்கை, வேளாண் சட்டங்கள் போன்ற  மக்கள் விரோத சட்டங்கள் என்பதையும் மறுக்க முடியாது.

இந்தியா என்பது மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு, சமய வழிபாடு என பன்முக தன்மை கொண்ட ஜனநாயக நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது நாட்டின் மூலமாக அறியப்படுகிறது. இந்த அடிப்படை கட்டமைப்பை உடைக்கும் ஆயுதத்தை வலதுசாரி அமைப்புகள் கையில் எடுத்துள்ளன.அதன் வெளிப்பாடேம,  தான் ஒரே தேசம்.. ஒரே சட்டம்.. ஒரே தேர்தல் என்பது போன்ற அறிவிப்புகள். இதை பிரபலப்படுத்தும் நோக்கிலேயே, ஷாகாக்கள் மூலம் வலதுசாரி அமைப்பான ஆர்எஸ்எஸ்,  மத அடிப்படைவாத கொள்கையை ஓங்கி பிடித்து வருகிறது, மதரீதியாக மனித குலத்தை பிரிக்க முற்படுவதால்தான், பல இடங்களில் கலவரம், அழிவு என்ற அபாயங்கள் தொடர்ந்து வருகின்றன என்பதை மறுக்க முடியாது.

தமிழகத்தில், ஆர்எஸ்எஸ்-ன் வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள  எழுத்தாளர் ஸ்டாலின் ராஜங்கம், இதற்கு, பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் தவிர, மற்றொரு காரணமும் உள்ளது.  அது,  தமிழகத்தில்  மதச்சார்பற்ற சக்திகளின் தோல்வி ,  மதச்சார்பற்ற சக்திகள்,  சமூகத்தில் மத மற்றும் கலாச்சார இடத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன. அரசியல் இயக்கங்கள் கலாச்சார நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்கின்றன. அதை ஆர்எஸ்எஸ் தனக்கு சாதகமாக்கி தன்னை வளர்த்துக்கொள்கிறது என்று  என்று கூறியுள்ளார்.