சென்னை

மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க 25 தமிழக பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நடந்து முடிந்த பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வுக்குப் பிறகு பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளன.   இதனால் பல கல்லூரிகளில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  ஒரு சில கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.   எனவே இந்த கல்லூரிகள் நிதி நெருக்கடியைத் தவிர்க்க வேறு நடவடிக்கைகள் எடுக்க உள்ளன.

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு இதையொட்டி இந்தக் கல்லூரி வளாகங்களில் பி ஏ மற்றும் பி எஸ்சி வகுப்புக்கள் தொடங்கலாம் என ஆலோசனை அளித்துள்ளன.  மேலும் நிலம் மற்றும்  கட்டுமானக் கட்டமைப்புகள் போதுமான அளவுக்கு இருந்தால் தனித் தனி வளாகங்கள் இல்லாமல் ஒரே இடத்திலும் இத்தகைய வகுப்புக்கள் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 25 பொறியியல் கல்லூரிகள் தங்கள் வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க விண்ணப்பித்துள்ளன.   இந்த விண்ணப்பங்களைக் கல்லூரி கல்வி இயக்குநரகம் பரிசோதித்துள்ளன.  ஒரு சில கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகளில் மிகச் சிறிய குறைகளே உள்ளதாக இயக்குநரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விதிமுறைகளின் படி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் 5 ஏக்கர், நகராட்சியில் 3 ஏக்கர் மற்றும் மாநகராட்சியில் 2 ஏக்கர் நிலம் தேவைப்படும்.  எனவே பொறியியல் கல்லூரி நடத்தத் தேவையான நிலம் மற்றும் கட்டிட கட்டமைப்புக்களைத் தவிர அதிகம் இருக்குமானால் புதிய கல்லூரிகள் தொடங்கலாம் எனத் தொழில் நுட்பக் கல்விக் குழு அறிவித்துள்ளது.

எனவே இந்த கோரிக்கைகள் விரைவில் ஏற்றுக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.