புதுடெல்லி: தற்போது பஹ்ரைன் நாட்டில் தண்டனைக் கைதிகளாக இருக்கும் 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு அரசு.

பிரதமர் நரேந்திர மோடியின் பஹ்ரைன் அரசுமுறை பயணத்தை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வெளிநாடுகளில் ஒட்டுமொத்தமாக 8189 இந்தியர்கள் சிறைதண்டனை அனுபவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையில் சவூதி அரேபியாதான் டாப். அங்கே சிறையில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 1811. அடுத்ததாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறைபட்டவர்களின் எண்ணிக்கை 1392.

அதேசமயம், பஹ்ரைன் நாட்டில் எத்தனை இந்தியர்கள் சிறையில் உள்ளனர் என்ற விரிவான தகவல்கள் தெரியவில்லை. அதேசமயம், பஹ்ரைன் அரசின் இந்த முடிவு குறித்து இந்திய பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பஹ்ரைன் அரசின் இந்த மனிதாபிமான முடிவிற்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. பஹ்ரைன் மன்னர் மற்றும் ஒட்டுமொத்த அரச குடும்பத்திற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.