தமிழக மின்வாரியம் சார்பில் கேரளாவுக்கு 250டிரான்ஸ்பார்மர், 40 ஆயிரம் மின் மீட்டர்கள்: அமைச்சர் தங்கமணி

ராசிபுரம்:

வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துள்ள கேரள மாநிலத்துக்கு 250 டிரான்ஸ்பார்மர்கள், 40 ஆயிரம் மின் அளவிடும் மீட்டர்கள் தமிழக மின்வாரியம் சார்பில் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறி உள்ளார்.

கேரளாவில் வரலாறு காணாத பேய் மழை காரணமாக மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவு காரணமாக சாலைகள் பழுதடைந்தும் உள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளத்தில்  மூழ்கி ஏராளமான மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்கள்) பழுந்தடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பல பகுதிகள் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளன.

வெள்ளம் காரணமாக பல மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு, வீடுகள்,   உடை மற்றும் உணவுக்கும் வழியின்றி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.  இவர்களுக்கு உலகெங்கிலும் இருந்து நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிதி உதவிஅளிப்பதாக அறிவித்து உள்ளது. அதுபோல தமிழக அரசு சார்பில், ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்ட நிலையில், அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளின்  எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத சம்பவளத்தை வழங்குவதாக அறிவித்திருந்தனர். மேலும் பல தனியார் நிறுவனங்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் நிதி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீண்டும் மின்சாரம் கிடைக்கும் வகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 250 மின்மாற்றிகள் மற்றும் 40 ஆயிரம் மின் அளவீட்டு கருவிகள் தமிழக மின்சாரத்துறை சார்பில்  வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

சேலம் அருகே  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த தகவலை தெரிவித்ததார்.

You may have missed