சென்னையில் இதுவரை 2500 பேனர்கள் அகற்றம்: அதிகாரிகள் சுறுசுறுப்பு

சென்னை:

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் மற்றும் சென்னை உயர்நீதி மன்றத்தின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பேனர்களை அகற்றும் பணியில் காவல்துறை அதிகாரிகளும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று முற்பகல் வரை சுமார் 2500க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய நவீன யுகத்தில் டிஜிட்டல் பேனர்களாகவும், ஃபிளெக்ஸ்கள் , சாலையோரங்கள் மட்டு மல்லாது சாலையின் நடுவிலேயும், பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் இடங்களிலும் அமைக்கப்படுவதால், சென்னை வாழ் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அரசியல்கட்சிகளின் பேனர் கலாச்சாரத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அரசும் அரசியல் கட்சிகளும் காதில் வாங்காமல் பேனர்களை வைத்து தங்களை பிரதிநிதிப் படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் அதிமுகவினர் வைத்த பேனர் காரணமாக,  பள்ளிக்கரணை யில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ கீழே விழுந்து  லாரியில் சிக்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங்கானது.

அதைத்தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும், பேனர் வைக்கக்கூடாது என்று தங்களது கட்சித் தொண்டர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சென்னை உயர்நீதி மன்றம், அரசையும், காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளை கடுமையாக எச்சரித்த நிலையில், மாணவி இறப்புக்கான இழப்பீடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் முதலே அதிகாரிகள் சென்னையில் சட்ட விரோதமாக மற்றும் முறையான அனுமதி பெறாத பேனர்களை  அதிரடியாக அகற்றி வருகின்றனர்.  மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ், 15 மண்டல அதிகாரிகளிடமும் பேனர்களை அகற்றும்படி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டி ருந்த பேனர்களை அகற்றி வருகிறார்கள். பல இடங்களில் சிலர் பேனரை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும், காவல்துறை உதவியுடன் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது.

இன்று  முற்பகல் வரை  சென்னையில் 2,500-க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு இருப்பதாக  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.