Random image

வோடபோன் – ஐடியா இணைப்பு : 2500 பேர் பணி இழப்பு

டில்லி

தொலைதொடர்பு நிறுவனங்களான ஐடியா மற்றும் வோடபோன் இணைப்பினால் சுமார் 2500 பேர் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஐடியா மற்றும் வோடபோன் தொலை தொடர்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து தற்போது வோடபோன் இந்தியா லிமிடெட் என்னும் பெயரில் செயல்பட்டு வருகிறது.   இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த தொலைதொடர்பு நிறுவனம் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இரு நிறுவனங்களிலும் முன்பிருந்தே பணிபுரியும் சுமார் 18000 ஊழியர்களில் சுமார் 5000 பேரை பணி மாற்றம் மற்றும் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இந்த 5000 ஊழியர்களில் பாதிப்பேர் இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆதித்யா பிர்லா குழும நிறுவனங்களில் இணைக்கப்பட உள்ளனர்.

மீதமுள்ள 2500 பேர் பணி இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.  இது குறித்து நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் இது தவறான தகவல் எனவும் ஊகத்தின் பேரில் அவ்வாறு சொல்லப்படுவதாகவும் கூறி உள்ளார்.   ஆனால் இந்நிறுவனத்தின் மற்றொரு அதிகாரி இதற்கு மாறாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், “இரு நிறுவனங்களும் நஷ்டத்தை சந்தித்ததால் இணைந்தன.   அதனால் பல சிக்கன நடவடிக்கைகளை எடுக்க உள்ளதும்,  இதனால் சுமார் 2000 – 2500 பேர் பணி இழக்கலாம் என்பதும் உண்மை தான்.   ஆனால்  உடனடியாக அவர்கள் பணியில் இருந்து அனுப்பப் பட மாட்டார்கள்.

ஏற்கனவே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு இந்த வருடம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது இரு நிறுவனங்களின் இணைப்புக்கு பின் சுமார் ரூ. 2000 கோடி செலவை மிச்சம் செய்ய வேண்டும் என ஏற்கன்வே தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.