திருவண்ணாமலை:

கார்த்திகை தீபத்திருவிழா வருவதையொட்டி, திருவண்ணாமலையில்  பாதுகாப்பு பணிக்காக 351 காமிராக்கள் உள்பட 8500 காவலர்களும் நியமிக்கப்பட உள்ளனர். அங்கு கிரிவலப் பாதையில் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல தீப விழாவையொட்டி 2500 சிறப்பு பேருந்துகளை இயக்கவும் தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை மீது கார்த்திகை தீபம் அன்று  மாலை ‘மகா தீபம்’ ஏற்றப்படுவது வழக்கம். பிரசித்திப் பெற்ற இந்த நிகழ்ச்சியை காண நாடு முழுவதும் இருந்து பக்தர்கள்  திருவண்ணாமலையில் குவிவார்கள்.

இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா  டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை, மலையில்  மகா தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், இந்த ஆண்டுதீபத் திருவிழாவுக்கு சுமார்  25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும்,  கிரிவலப்பாதை உட்பட கோயிலைச் சுற்றி 351 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதாகவும், சுமார் 8500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

அதுபோல, மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலை மலையில் ஏற 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 2 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.  14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.