கெய்ரோ: எகிப்திலுள்ள சக்காரா என்ற இடத்தில், 2500 ஆண்டுகளுக்கு முந்தைய 27 சவப்பெட்டிகளை கண்டுபிடித்துள்ளனர் அகழ்வாராய்ச்சியாளர்கள்.

மரத்தால் செய்யப்பட்ட அந்த சவப்பெட்டிகள், சிறப்பான முறையில் மூடப்பட்டுள்ளன. அந்தப் பெட்டிகள் கடந்த 2500 ஆண்டுகளாக பாதிக்கப்படாமல் அப்படியே இருப்பதாகவும், அதனுள் இருக்கும் உடல்கள் மம்மிகளாக பதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, இதே சக்காராவில் பதப்படுத்தப்பட்ட சிங்கக் குட்டிகள், முதலைகள் மற்றும் நாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2500 ஆண்டுகளுக்கு முன்னதாக, சக்காரா என்ற இடத்தில், பண்டைய எகிப்தியர்கள் இறந்தவர்களைப் புதைத்துள்ளனர். அவர்களின் உடல் உறுப்புகள் நீக்கப்பட்டு, உடல் பதப்படுத்தப்பட்டு மரப்பெட்டியில் வைக்கப்பட்டு புதைக்கப்படும்.

கடந்த 100 ஆண்டுகளில் எகிப்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில், பெரியளவில் கிடைத்த மம்மிகள் இதுவாகும் என்று கூறப்பட்டுள்ளது.