டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படைப் பிரிவு வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏப்ரல், மே மாதங்களில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்புக்கு உரிய படைகளை அனுப்புவது குறித்து ஏற்கெனவே உள்துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பேசியுள்ளனர்.

அதன்படி, இந்த 5 மாநிலங்களுக்கும் 250க்கும் மேற்பட்ட கம்பெனி படைகளை அனுப்ப உள்துறை முடிவு செய்துள்ளது. சிஆர்பிஎப், பிஎஸ்எப், இந்தோ திபெத் எல்லை படை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, சாஸ்த்ரா ஷீமா பால் பிரிவினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறி இருப்பதாவது: 5 மாநில சட்டசபை தேர்தலுக்காக 250க்கும் மேற்பட்ட கம்பெனி மத்தியப் படைகள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 125 கம்பெனிப் படைகள் மேற்கு வங்கத்துக்கும், 45 கம்பெனிகள் தமிழகத்துக்கும், 40 கம்பெனி அசாம் மாநிலத்துக்கும் அனுப்பப்படும்.

கேரளாவுக்கு 30 கம்பெனியும், புதுச்சேரிக்கு 10 கம்பெனியும் அனுப்பி வைக்கப்படும். எத்தனை கட்டங்களாக தேர்தல் நடக்கிறது என்பதை பொறுத்து, மத்திப்படை கம்பெனிகள் எண்ணிக்கை மாறுபடும். இந்த 250 கம்பெனி படைகள் போக, 75 கம்பெனிப்படைகள் தனியாக தயாராக வைக்கப்படுவார்கள். எந்த மாநிலத்துக்கு தேவைப்படுகிறதோ அங்கு பாதுகாப்புக்காக உடனடியாக இந்த 75 கம்பெனிப்படையினரும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.