25ந்தேதி பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி இன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம்

--

டில்லி:

பிரதமர் நரேந்திர மோடி தென்ஆப்பிரிக்காவில் வரும் 25ந்தேதி நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் விதமாக  இன்று ஆப்பிரிக்க  நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இன்று புறப்படும் பிரதமர் மோடி,  முதல் நாள் பயணமாக  20 ஆண்டுகளுக்கு பிறகு ருவாண்டா  செல்கிறார். அங்கு ருவாண்டா அதிபரையும் முக்கிய நபர்களையும் சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து, அங்கு,  கிகாலி என்ற இடத்தில் 1994-ம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடத்தை பார்வையிடுகிறார்.

அதைதொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) உகாண்டா செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து  நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற  இருக்கிறார்.

உகாண்டா நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ள முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.

பின்னர் அங்கிருந்து  25-ந் தேதி தென்ஆப்பிரிக்காவுக்கு பறக்கிறார். அங்கு அநநாட்டு அதிபரை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும் வகையில் பேச்சு வார்த்தை நடத்துகிறார். அத்துடன் அங்கு  நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில்  கலந்துகொள்கிறார்.

இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளிடையே அமைதி, பாதுகாப்பு குறித்த முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் வசித்து வரும்  இந்திய சமூகத்தினருடனும் மோடி கலந்து ரையாட இருப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.