கரூரில் 267 குளங்களை தூர்வார 2.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் அருகே, தண்ணீர்பந்தல் பாளையம், கருப்பம்பாளையம், பஞ்சமாதேவி, சித்தக்காட்டூர் ஆகிய பகுதிகளில், 2.21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், குளங்களை தூர்வாரும் பணியை, போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூர் மாவட்டத்தில், அமராவதி, காவிரி மற்றும் அரியாறு ஆகிய மூன்று வடிநிலக்கோட்டங்களில், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், வாய்க்கால்கள் பல இருக்கின்றன. அமராவதி வடிநிலக்கோட்டத்திற்குட்பட்ட பள்ளபாளையம் வாய்க்கால், கோயம்பள்ளி சோமூர் வாய்க்கால், திருமாநிலையூர் வாய்க்கால், மாயனூர் மணவாசி வாய்க்கால், சின்னதாராபுரம் வாய்க்கால் மற்றும் நஞ்சைகாளக்குறிச்சி வாய்க்கால்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவிரி வடிநிலக்கோட்டத்திற்குட்பட்ட பாப்புலர் முதலியார் வாய்க்கால், கட்டளை வாய்க்கால், புதுகட்டளை வாய்க்கால், மகாதானபுரம் வாய்க்கால் படுகை மற்றும் சித்தலவாய் வாய்க்கால்களும், அரியூர் வடிநிலக்கோட்டத்திற்குட்பட்ட, கடவூர் வட்டத்தில் உள்ள தென்னிலை நீர்த்தேக்கம், மாவத்தூர் குளம், பன்னப்பட்டி குளம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில், தாதம்பட்டி நீர்த்தேக்கம், பாப்பக்காப்பட்டி குளம், குளித்தலை வட்டத்தில், மேலவெளியூர் நீர்த்தேக்கம், கழுகூர் குளம் உள்ளிட்ட நீர்வழித்தடங்களும் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில், 33 பணிகளுக்கு, 6.87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள, 67 சிறு பாசனக்குளங்களை தூர்வார, 3.35 கோடி ரூபாய், 267 குளங்களை தூர்வார, 2.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடர்ந்து நடக்கின்றன” என்று தெரிவித்தார்.

அமைச்சர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஆர்.டி.ஓ சந்தியா உட்பட பலர் பங்கேற்றனர்.