சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் இரட்டை பதவி வகிக்கும் 27 டெல்லியின் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்யும்படி ஜனாதிபதிக்கு அனுப்பிய மனு ஒன்றை ஆய்வு செய்து கருத்து கூறும்படி ஜனாதிபதி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார். இது அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடியைத் தந்துள்ளது.

 kejriwal

விப்ஹோர் ஆனந்த் என்ற சட்டக்கல்லூரி மாணவர், டெல்லியின் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 27 பேர் சட்டத்துக்கு புறம்பாக இரட்டை பதவி வகிப்பதாக ஜனாதிபதிக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். இவர்களுள் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், துணை சபாநாயகர் ராக்கி பிர்லா, முன்னள் துணை சபாநாயகர் பந்தனா குமாரி ஆகியோரும் அடக்கம்.
எந்த சட்டமன்ற உறுப்பினரும் இரட்டைப் பதவிகள் வகிக்ககூடாது என்ற சட்டத்தை மீறி பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ரோகி கல்யாண் சமிதி என்ற அமைப்பின் தலைவர்களாக இவர்கள் செயல்படுவதாக கூறி இந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இது பற்றி ஆம் ஆத்மி தரப்பு கூறுகையில் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் 2009 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் எடுத்த முடிவின்படியும், நேச்சுரல் ரூரல் ஹெல்த் மிஷன் இணையதளம் கூறும் கருத்தின்படியும் எந்த ஒரு சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரும் வேறு எந்த அமைப்பிலும் தலைவராகவோ அல்லது உறுப்பினராக இருப்பது குற்றமல்ல என்று குறிப்பிட்டுள்ளது. ஆனாலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் கருத்து என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.