சென்னை:

போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய ஆய்வறிக்கையை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழக  முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினார்.

தமிழகத்தில் நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, பேருந்து கட்டணத்தை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியது.  போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதாகவும்,  போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வு, பராமரிப்பு செலவு ஆகியவற்றை காரணமாக காட்டி பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்,  பேருந்து கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்ய திமுக  5 பேர் கொண்ட  ஆய்வு குழுவை அமைத்தது.

அந்த குழுவினரின் அறிக்கையை திமுக செயல்தலைவர் இன்று பகல் 12 மணி அளவில் தமிழக முதல்வர் எடப்பாடியிடம், தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் அறையில் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,

போக்குவரத்து கழகங்களை மேம்படுத்துவது தொடர்பான திமுகவின் ஆய்வு அறிக்கையை முதலமைச்சரிடம் கொடுத்ததாகவும், அதில், போக்குவரத்து கழகங்களை மேம்படுத்துவது தொடர்பான  27 பரிந்துரைகள்  இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆய்வறிக்கையில்,  போக்குவரத்து சேவையை, மக்களின்  சேவையாக கருதி, அதன்மூலம் ஏற்படும் இழப்புகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,

கலால் வரி, மதிப்பு கூட்டுவரி ஆகியவற்றின் காரணமாகவே டீசல் விலை உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு மாதந்தோறும் நல்லிணக்க முகாம்கள் நடத்த வேண்டும்,‘ மத்திய தொகுப்பு நிதியத்தின் மூலம் போக்குவரத்து கழகங்களை சீரமைத்திட வேண்டும் உளபட 27 பரிந்துரைகளை அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.

மேலும், தாங்கள் கொடுத்த ஆய்வறிக்கையின் படி அரசு செயல்பட்டால், பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமே வராது. அதை செயல்படுத்துகிறார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

பேருந்து கட்டணத்தை குறைக்கவில்லை எனில், அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.