சென்னை: இன்னும் சில ஆண்டுகளில் சென்னை மாநகருக்குள் பயணம் செய்வோர், தங்கள் கைகளில் மொபைல் ஆப் மற்றும் ஸ்மார்ட் கார்டு வைத்திருந்தால் போதுமானது. அவர்கள் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு எளிதாக சென்றுவரலாம்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இன்னும் சில ஆண்டுகளில் மொத்தம் 28 இடங்களில் அமைக்கப்படவுள்ள பரிமாற்ற(interchange) மெட்ரோ ரயில் நிலையங்களின் மூலம், மெட்ரோ, எம்ஆர்டிஎஸ், புறநகர் ரயில் நிலையங்கள் மற்றும் எம்டிசி பேருந்து நிலையங்கள் போன்றவை இணைக்கப்படவுள்ளன.

இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் அமைக்கப்படவுள்ள 118.9 கி.மீ. நீள பாதையில், சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டால், தங்களின் மொபைல் ஆப் மூலமாகவே தாங்கள் செல்லும் இடத்திற்கான எளிதான வழியை அறிந்து, அதற்கேற்ப எந்த ரயில் நிலையத்தில் எந்த ரயிலைப் பிடிக்க வேண்டும் மற்றும் எந்த ரயில் நிலையத்தில் இறங்கி எந்தப் பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்பதை எளிதாக அடையாளம் கண்டு முடிவுசெய்ய முடியும்.

இந்த திட்டம், சென்னை நகரின் போக்குவரத்து நெருக்கடி மற்றும் போக்குவரத்துக்கு தேவைப்படும் இடநெருக்கடியை குறைக்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்தப்பட உள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.