இதுவரை 28பேருக்கு கொரோ வைரஸ் பாதிப்பு! மத்தியஅமைச்சர் ஹர்ஷவர்தன்

டெல்லி:

ந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார். இவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவித்து உள்ளார்.

உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவுக்குள்ளும் புகுந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 28 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். வைரஸ் பரவுவதை  தடுக்க எடுக்கப்பட வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து இன்று காலை நிர்மான் பவனில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், இதுவரை 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலியைச் சேர்ந்த பயணிகள் 16 பேர் மற்றும் டிரைவருக்ககும் (மொத்தம் 17 பேர்),  ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், கேரளாவில் 3 பேருக்கும் (தற்போது குணமாகிவிட்டது), தெலுங்கானா மாநிலத்தில் ஒருவருக்கும், டெல்லியில் ஒருவருக்கும்  கொரானா தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த 28 பேரில் இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள்  16 பேர், மற்ற 12 பேர் இந்தியர்கள்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம்  வந்த சுமார் 5,89,000 பேருக்கு கொரோனா தொற்று சோதனை நடைபெற்றதாகவும், துறைமுகங்களில் 15,000 க்கும் அதிகமானோருக்கும்,  மற்றும் நேபாளத்தின் எல்லையில் 10 லட்சத்திற்கும் அதிகமானனோருக்கும் கொரோனா தொற்று சோதனை நடைபெற்று உள்ளதாகவும் பட்டியலிட்டார்.

தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக  12 நாடுகளில் இருந்து இந்தியா வர விமானப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  மேலும் பல நாடுகள் அந்த பட்டியலில் சேர்க்கப்படும் என்று கூறினார்.