காவல்துறையினர் புகார் வாங்க மறுப்பு: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை

சாஜகான்பூர்:

காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்ததால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 28வயதான இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். உ.பி. மாநிலத்தில் இந்த பரிதாப சம்பவம் நடைபெற்று உள்ளது.

உ.பி. மாநிலம்  ஷாஜகான்பூர்  பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால், அங்குள்ள காவலர்கள் அவர் புகாரை வாங்க மறுத்து அவரை திருப்பி அனுப்பி உள்ளனர்.

இதன் காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளான அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக 3 காவலர்கள் தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கூறிய அந்த இளம்பெண்ணின் கணவர், ராம்வீர், தனது மனைவியின் புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்து, குற்றவாளியான வினய்குமாரை சந்தித்து  இரு தரப்பினரும் சமசரம் செய்துகொள்ளுமாறு கூறினர்.  இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவம் கடநத  29ந்தேதி நடைபெற்றுள்ளது.  தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடல் மாவட்ட மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அவரை பாலியல் பலாத்காயம் செய்ததற்கான தடயங்கள் மற்றும்  காயங்கள் இருந்ததாகவும் இளம்பெண்ணின் கணவர் கூறி உள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் பணியாற்றிய 3 காவல்கள் தற்காலிக பணி நீக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறி உள்ளார்.