போபால்,

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சி காரணமாக தற்கொலை செய்துள்ள நிலையில்,

மத்திய பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 287 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

மத்தியபிரதேசத்தில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து  3வது முறையாக வெற்றிபெற்று ஆட்சி நடத்தி வருகிறது.

இங்கு மாநில பாரதியஜனதா அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக  விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மத்தியபிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ ராம்நிவாரஸ் ராவத், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட, மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை குறித்த  கேள்விக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமான தகவல்  அளித்துள்ளது.

அதில், 2016ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி முதல் 2017ம் ஆண்டு  பிப்ரவரி (தேதி வரை) வரை 106 விவசாயிகள் மற்றும் 181 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற  குளிர்கால கூட்டத் தொடரில்,  ராவத் கேள்விக்கு பதிலளித்த மாநில அரசு, 2016 ஜூலை முதல் நவம்பர் 15ந்தேதி வரை 531 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும்,  2016 ஜூலை முதல் மத்திய பிரதேசத்தில் 818 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மூன்று மாதங்களில்  தற்கொலை செய்து கொண்ட 1,761 பேரில் 160 பேர் மாணவர்கள், 287 விவசாயிகள் என்றும் கூறி உள்ளனர்.

தேசிய குற்றப்பதிவு பணியகம் (என்.ஆர்.ஆர்.பி) வெளியிட்டுள்ள தற்கொலைகள் பற்றிய சமீபத்திய  புள்ளி விவரங்களில்,  2016ம் ஆண்டில் நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் 8,007 பேரும், இதில் 1,290 பேர்  மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தற்கொலைகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகள் என்றும் கூறி உள்ளது.

வறட்சி காரணமாக பயிர் கருகுதல், பயிர்கள் சரியான விலைக்கு விற்க முடியாதது,  கடன்களை திருப்பிச் செலுத்த முடியாதது, வறுமை, சொத்து தகராறுகள், திருமண சம்பந்தமான பிரச்சினைகள், குடும்ப பிரச்சினைகள், நோய் போன்ற காரணங்களாலேயே விவசாயிகள் தற்கொல கொள்வதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

கடந்த 2001முதல்  2015 க்கு இடையில், மாநில குற்றவியல் பதிவுக் குழுவின் படி, மத்திய பிரதேசத்தில் மட்டும் 18,687 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற புள்ளி விவரத்தையும் வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

விவசாயிகள் தற்கொலை  குறித்து கருத்து தெரிவித்துள்ள, மத்திய பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ., ராமேஷ்வர் ஷர்மா,

குறைவான விவசாயிகளே தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், விவசாயிகள் மானியத்திற்காகவே விவசாயம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டி உள்ளார்.

இதுபோல் ஏற்கனவே பாரதியஜனதாவை சேர்ந்த எம்பி.. கோபால் ஷெட்டி கூறும்போது, விவசாயிகள் தற்கொலை தற்போது பேஷனாக மாறி உள்ளது என்று  கிண்டல் செய்திருந்தார்.

விவசாயிகள் தற்கொலை  மகாராஷ்டிரா மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 1ந்தேதி முதல் ம.பி. விவசாயிகள், மாநில அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தில்,  விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கு சிறந்த கொள்முதல் விலை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  கடந்த 1-ம் தேதி முதல்  தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக பால் மற்றும் காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  போராட்டத்தின்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே மண்ட்சோர் என்ற இடத்தில் வன்முறை வெடித்தது.

இதன் காரணமாக வானங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 5 விவசாயிகள் பரிதாபமாக பலியான சோகம் நடந்தேறியது.

இதன் காரணமாக மத்திய பிரதேசத்தில் கடும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக விவசாய நிலங்களை பாழ்படுத்தி வருவது போலவே, மத்திய பிரதேசத்தில் ஆட்சி செய்துவரும் பாரதியஜனதா அரசு, அங்குள்ள விவசாயிகள் குறித்து கவலைப்படுவதாகவோ, விவசாயிகளை காப்பாற்ற எந்தவித நடவடிக்கையுமோ எடுக்க முயற்சி செய்வதாக  தெரியவில்லை.

விவசாயி தற்கொலைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உடனடி  நடவடிக்கை எடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள்  வலியுறுத்தி வருகின்றன.