வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 144 தடையை மீறியதாக இதுவரை 2,879 பேர் கைதுசெய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமலும், ஊரடங்கை மதிக்காமலும் அலட்சியமாக வெளியில் நடமாடுகின்றனர். 3 நாட்களுக்கு தேவையான காய்கறிகளையும், 10 நாள்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களையும் வாங்கி வைத்துக்கொள்ளுமாறு ஆட்சியர் சண்முகசுந்தரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால், அதை ஏற்காமல் தினமும் காய்கறி, மளிகைப் பொருள்கள், மருந்துகளை வாங்க கடைகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். அதைத் தடுக்கும் வகையில், தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி 144 தடையை மீறியதாக இதுவரை மாவட்டம் முழுவதும் 2,879 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2,292 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

அதே சமயம், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கும் மறு உத்தரவு வரும்வரை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் கொடுக்கப்பட மாட்டாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.