சென்னை:
 சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில்,  கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 29 பேர் உயிரிழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1111 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இதுவரை  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக இருக்கும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 1,542 ஆக அதிகரித்துள்ளது. மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு  70,017 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44,882 பேர் கொரோனா நோய் தொற்று குணமாகி  வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போதைய நிலையில் 24,052  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில்   30 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1082-ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலான இடைப்பட்ட சுமார் 16 மணி நேரத்தில் மேலும் 29 பேர் கொரோனா  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதனப்டி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் 7 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 7 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் மற்றும் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவர்  என மொத்தம் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.