அதிரடி ரெய்டால் 2900 கோடி கருப்பு பணம் பறிமுதல்! வருமானவரித்துறை

டில்லி:

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் 586 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.2,900 கோடி கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை நடைபெற்ற அதிரடி ரெய்டுகளில்,   அதிகபட்சமாக தமிழக தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.140 கோடிக்கும் அதிகமான புதிய ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றிய தாக வருமான வரித் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 8ந்தேதி இரவு, கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டு நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்.

ஆனால், அரசு எதிர்பார்த்த அளவுக்கு கருப்பு பணம் வெளிவரவில்லை. ஆங்காங்கே கருப்புப் பணத்தை மாற்றும் நடவடிக்கைகள் ரகசியமாக நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்தது.

இதைத் தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தபோதிலும், வங்கி அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகத் தெரிகிறது.

இந்தச் சூழ்நிலையில், சந்தேகத்துக்குரிய நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதுவரை இந்தியா முழுவதும்  586 இடங்களில் அவர்கள் சோதனை நடைபெற்றுள்ளது. அதில் ரூ.300 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகளும், ரூ.2,600 கோடி கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கணக்கில் வராத பணத்தில் பெரும்பாலானவை புதிய ரூ.2,000 நோட்டுகளாக இருந்தன. ஒரே சோதனையில் அதிகபட்சமாகக் கைப்பற்றப்பட்டது சென்னையில் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடத்தில் இருந்துதான் என்று வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு மட்டும் ரூ.140 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் ரூ.52 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதைத் தவிர டில்லியில் உள்ள  வழக்கறிஞர்  ஒருவரது வீட்டில் ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடகாவில் வங்கி அதிகார்கள் மற்றும் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டு கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது.

மேலும், மகாராஷ்டிரத்தில் உள்ள வங்கி அதிகாரிகள் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

உரிய ஆதாரங்களின்றி வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தையும் பறிமுதல் செய்ததாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார்ட்டூன் கேலரி