பீஜிங்

சீனாவில் நேற்று வரை 291 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சீன அரசு தெரிவித்துள்ளது.

பாலூட்டி விலங்குகள் மற்றும் பறவைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகையான நோய்த் தொற்று கரோனா வைரஸ் ஆகும்.. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல், மூச்சுக் காற்று, சளி, ரத்தம் மூலமாகப் பிறருக்கும் அந்த பாதிப்பு பரவ வாய்ப்புள்ளது என்பதால் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும். அந்நோய்க்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளா விட்டால் தீவிர சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடக்கூடும்.

சீனாவில் இந்த கரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்திகள்  வெளியிட்டன.  இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவலாம் என்னும் அச்சத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சீன அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் நேற்று வரை சீனாவில் 291 பேருக்கு கரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் ஹுபெய் பகுதியில் 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளோர் பீஜிங், ஷாங்காய், மற்றும் தெற்கு குவாங்டாங் பகுதிகளில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.