கஜாவுக்கு 29,500 மின் கம்பங்கள் சேதம்: தமிழக அரசு தகவல்

சென்னை:

ஜா புயல் ஏற்படுத்தி உள்ள  வரலாறு காணாத பாதிப்பு காரணமாக 29,500 மின் கம்பங்கள் சேதமாகி உள்ளதாகவும், 205 டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்து உள்ளதாக தமிழக அரசு கூறி உள்ளது.

நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் சுமார் 120 கி.மீட்டர் வேக சூறைக்காற்றுடன்  நாகை மாவட்டத்தின் வேதாரண்யத்தில் கரையை கடந்தது கஜா புயல். புயல் காரணமாக கடலூர், நாகை, வேதாரண்யம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, திண்டுக்கல், மதுரை, கொடைக்கானல் தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களில் கடுமையான மழை பொழிந்தது. பல மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய கஜா நேற்று பிற்பகல் வலுவிழந்து கேரளா நோக்கி சென்றது.

இந்த நிலையில், கஜாவின் கோர தாண்டவத்துக்கு 29,500 மின்கம்பங்கள், 205 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கஜா புயலின் காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் சில மாவட்டங்களில மின் கம்பங்கள், மின் மாற்றிகள், துணை மின் நிலையங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன. இன்று மாலை நிலவரப்படி

உயரழுத்த மின் கம்பங்கள் 10,500, தாழ் அழுத்த மின் கம்பங்கள் 19,000 என மொத்தம் 29,500 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

உயரழுத்து மின் கம்பிகள் 810 கிலோ மீட்டர், தாழ் அழுத்த மின் கம்பிகள் 2435 கிலோ மீட்டர் என மொத்தம் 3245 கி.மீ மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. மின் மாற்றிகள் 205 சேதமடைந்துள்ளன. உயரழுத்த மின் கோபுரங்கள் 3 சேதமடைந்துள்ளன.

ஒரு சில பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மின் சேதஙளக் அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேதமடைந்த மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின் மாற்றிகள், மின் கோபுரங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.