சென்னை:

மிழகத்தில் இதுவரை 2,951 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த ஒன்பது மாதங்களாக 390 பேர் டெங்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் இறுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிலர் மரணத்தை தழுவியதைத் தொடர்ந்து டெங்கு பீதி மீண்டும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்குக்கு சென்னையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, சேலம், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கோவை அரசு மருத்துவமனையில் 13 பேர் டெங்குவாலும் 72 பேர் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்..

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் சிகிச்சையும் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஆய்வு செய்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,  டெங்கு காய்ச்சல் பாதிப்பை கூட வெளிப்படை யாக தர முடியாத சூழலில் அரசு உள்ளதாகவும், டெங்கு காய்ச்சலை, மர்ம காய்ச்சல் என தவறாக பரப்புரை செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து,  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது,தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2,951 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக வும் தெரிவித்தார். வடசென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது என குறிப்பிட்ட அவர், காய்ச்சல் வந்த5 நாட்களுக்கு பிறகுதான் டெங்கு பாதிப்புதெரியவரும் என கூறினார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 4,486 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 13 பேர் டெங்குவுக்கு பலியாகியிருந்தனர். 2017-ம் ஆண்டில் 23,294 பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகி 65 பேர் இறந்துள்ள னர். 2016-ம் ஆண்டில் 2531 பேர் பாதிப்பு 5 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் 4535 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 12 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு மே மாதம் வரை 951 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தற்போது 2,500க்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.