டெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜா, திமுக எம்.பி.கனிமொழி மீதான 2ஜி வழக்கில், சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில்  தொடுத்த மேல்முறையீடு வழக்கின் இன்றைய விசாரணையின்போது, விரைவாக விசாரிக்க கோரி அரசு வழக்கறிஞரின் வாதத்தை  ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வழக்கை ஜனவரிக்கு தள்ளி வைத்தனர்.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, திமுகவும் அமைச்சரவையில் இடம்பிடித்து. மத்திய தொலை தொடர்பு அமைச்சராக ராஜா பதவி வகித்தார். அப்போது,  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.76 லட்சம் கோடி  முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த  சிபிஐ நீதிமன்றம்,  வழக்கில் தொடர்புடைய ராஜா, கனிமொழி உள்பட14 பேரையும் விடுதலை செய்து கடந்த  2017ம் ஆண்டு  டிசம்பர் 21ந்தேதி  தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.  பின்னர், சிபிஐ வலியுறுத்தியதின் பேரில்,  ஜூலை 30ந்தேதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று முடக்கம் காரணமாக விசாரணை நடத்தப்படாமல் முடங்கியது.. இதையடுத்து, விசாரணையை ரத்து செய்யக்கோரி  ராஜா, கனிமொழி தரப்பில், சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம், டிசம்பர் 1ந்தேதி  விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணை விரைவில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அதை ஏற்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த மாதம் 2ஜி வழக்குகளை விசாரிக்க முடியாது என தெரிவித்துடன்,   வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.