2ஜி வழக்கில் இருந்து விடுதலை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை,

2ஜி வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இதன் காரணமாக திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா, திமுக எம்.பி. கனிமொழி மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டும் நீங்கி உள்ளது. இதன் காரணமாக திமுகவின் மீதான அவப்பெயர் நீங்கி உள்ளது.

இந்நிலையில் தீர்ப்பை வரவேற்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

2ஜி வழக்கின் தீர்ப்பில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  சகோதரி கனிமொழி எம்.பி., ஆ.ராசா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்.

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியான தி.மு.க. மீது அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்திதான் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. அந்த பொய் பிரசாரம் முறியடிக்கப்பட்டுள்ளது. உண்மை வென்றுள்ளது.

காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மீது சுமத்தப்பட்ட பழி துடைக்கப்பட்டு விட்டது. நீதி, நேர்மை, உண்மை வென்றுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

வைகோ:

2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என ஒரே வாக்கியத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முத்தரசன்:

2ஜி வழக்கின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு தொடரக்கூடாது. வழக்கு தொடர்ந்தால், அதை ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும்.

தமிழிசை:

தீர்ப்பை தீர்ப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறி உள்ளார்.

கி.வீரமணி:

‘ 2 ஜி வழக்கில் தி.மு.க நெருப்பாற்றில் நீந்தி வெளிவந்துள்ளது. முழு விடுதலை பெற்ற ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், சரத்குமார் முதலிய அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.