2ஜி, நிலக்கரி ஊழலில் நடவடிக்கை எடுக்காத பாஜக அரசு: அமித்ஷா மீது தம்பித்துரை கடும் பாய்ச்சல்
சென்னை:
தமிழகத்தில் ஊழல் மலித்துவிட்டது என்று கூறிய பாஜ தலைவர் அமித்ஷா மீது அதிமுக எம்.பி. தம்பிதுரை கடுமையாக சாடி உள்ளார்.
முன்னாள் மத்திய காங்கிரஸ் அரசு மீது 2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, ரயில்வே போன்ற ஊழல்களை கூறி வந்த பாரதியஜனதா கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
‘கரூரில் செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது என அமித்ஷா கூறுவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருவத்துவமனை அமைக்க மூன்று ஆண்டு காலம் தாமதப்படுத்தியதற்கு காரணம் கூறாத மத்திய அமைச்சர், தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தாங்கள் தான் காரணம் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்றார்.
மாநிலத்தை ஆளும் கட்சிகள் மீது எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டு கூறுவது வழக்கமானதே என்ற தம்பித்துரை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தான் இந்தியாவிலே தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
அதை ஏற்க முடியாது என்றவர், அமித்ஷா ஊழலை நிரூபிக்க வேண்டும். அதனைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
திராவிடக் கட்சிகளை என்றைக்கும் தேசிய கட்சிகளால் அழித்துவிட முடியாது என்ற தம்பித்துரை, ஏற்கனவே முந்தைய காங்கிரஸ் அரசு மீது 2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, ரயில்வே ஊழல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியது. இந்த 4 ஆண்டு கால பாஜக ஆட்சியில் அந்த குற்றச்சாட்டுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி கொடுத்ததாக அமித்ஷா கூறியுள்ளார். அதே காலக்கட்டத்தில் தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு ரூ.20 லட்சம் கோடி வருமானம் சென்றுள்ளது என்றும், உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.2000 கோடி நிதியை மத்திய அரசிடம் கேட்டும் இன்னும் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
லோக் ஆயுக்தாவில் முதல்வர் மீது புகார் அளிக்க வகையில்லை என்றால், அதற்கு சட்டப்பேரவையில் திமுக குரல் கொடுக்காமல் வெளிநடப்பு செய்வது ஏற்புடையதல்ல என்றும், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்த போது திமுக போட்ட வழக்குக் காரணமாக தேர்தல் நின்று போனது என்றும் கூறினார்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு முடிவெடுக்கப்படும்என்றும், தொடங்க உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், நீட் தேர்வு குறித்து குரல் கொடுப்போம்.
இவ்வாறு தம்பித்துரை கூறினார்.