Random image

2ஜி சாதிக் பாட்சா மரணம்.. அரியலூர் பிரபாகரன் சொல்வது உண்மையா?

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள  தொலைதொடர்புத்துறை முன்னாள்  அமைச்சர்  ஆ. ராசாவின் நண்பர் சாதிக்பாட்சாவை கொலை செய்ததாக அரியலூர் இளைஞர் பிரபாகரன் சொல்லியிருப்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கடந்த 16.03. 2011 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கில்  உயிரற்ற உடலாக தொங்கியது சாதிக் பாட்சா உடல்.

கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் அதிபராக இருந்த இவர், 2ஜி ஊழல் வழக்கு விவகாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டவர்.  சி.பி.ஐ., விசாரணை வளையத்தில் இவரும் இருந்தார்.  ‘எனக்குத் தெரிந்த விவரங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். என் மீது எந்தத் தவறும் இல்லை!’ என்று ஊடகங்களிடம்  முழங்கினார் சாதிக். ஆனாலும், ‘ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் முக்கியமான தடயங்கள் சி.பி.ஐ-யின் கையில் சிக்கி இருப்பதால், சாதிக் அப்ரூவராக மாறுவார்’ என்ற பரபரப்பு அப்போது ஏற்பட்டது.

சாதிக் பாட்சா
சாதிக் பாட்சா

இந்த நிலையில் சாதிக், மார்ச் 16 ம் தேதி டெல்லி செல்ல  விமான டிக்கெட் எடுத்து வைத்திருந்தார்., டெல்லிக்குக் கிளம்புவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் , தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.

இவரின் மர்ம மரணம் பற்றி விசாரித்த சி.பி.ஐ., தற்கொலை என்று கூறி அந்த விவகாரத்தை மூடியது.

இருந்தாலும், சாதிக்கின் மர்மம் தொடர்பான சந்தேகங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 17.5.2016 அன்று திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில்  பத்திரிகையாளர்களை சந்தித்த பிரபாகரன் என்கிற அரியலூர் நபர்,  ‘சாதிக் பாட்ஷாவை நாங்கள் கொலை செய்தோம்’ என்று சொல்லி அதிரவைத்தார்.

இதையடுத்து, ம.தி.மு.கழக தலைவர் வைகோ, “சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டார் என்று ஏற்கெனவே சொல்லி வருகிறேன். இந்த  பின்னணியை  சிபிஐ விசாரிக்கவேண்டும். 2 ஜி ஊழலில் தி.மு.கழக பிரமுகர்களை காப்பாற்றவே சாதிக் கொல்லப்பட்டிருக்கிறார்” என்றார்.

அரியலூர்  பிரபாகரன் தனது பேட்டியின் போது, “நான், தமிழர் நீதிகட்சியின் தலைவர் சுப.இளவரசனுக்கு உதவியாளராக இருந்தேன். அவர்  மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் சாதிக் அறிமுகமானார்.  அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து வந்தேன்.

2 ஜி வழக்கு வெடித்த நிலையில்  சிபிஐ-யில் சாதிக் உண்மையை  சொல்லிவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து நான், ஆ.ராசாவின் அக்காள் மகன் பரமேஸ்குமார் ஆகியோர் சென்னை தி.நகரில் இருக்கும் சாதிக்பாட்சா வீட்டுக்கு சென்றோம். அப்போது அங்கு ஜாபர் சேட் எனும் நபர் இருந்தார். சாதிக்கிடம்  பேசிக்கொண்டிருக்கும்போது வார்த்தைகள் வலுக்க, ஜாபர்சேட் சாதிக்கின் கழுத்தை நெரிக்க, நான் கால்களை பிடிக்க, ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார் சாதிக்கின் வயிற்றின் மேல் உட்கார்ந்து கொள்ள, சாதிக்கை கொலை செய்தோம். பிறகு அங்கிருந்து தப்பித்தோம். அதுவரை ஜாபர் சேட் போலீஸ் அதிகாரி என்பது எனக்குத் தெரியாது. பிறகுதான் தெரியும். கொஞ்ச நாட்களுக்கு எனக்கு சிறிது   கொடுத்தார்கள்.

அதன்பிறகு எனக்கு கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்தார்கள்.  இதையெல்லாம் பலமுறை உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்த கண்ணப்பன் மற்றும் சிபிஐ அதிகாரிகளிடம் கூறினேன். அவர்கள் அதை காதில் வாங்காமல் என்னை விரட்டி விட்டார்கள். இதையெல்லாம் தெரிந்துகொண்ட பரமேஸ்குமார், எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் பத்திரிகையாளர்களிடம் உண்மையைச் சொல்கிறேன்”” என்றார் பிரபாகரன்.

பிரபாகரன் பற்றி திருச்சி தி.மு.கழக அனுதாபிகளான காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது, “கடந்த ஒரு வருடகாலமாகவே அரியலூர் பிரபாகரன் பலரிடமும் இதே விவகாரத்தை சொல்லி வருகிறார். அவருக்கு மனநிலை சரியில்லை என்று நாங்கள் நினைக்கிறோம். சாதிக் பாட்சா மர்ம மரணம் நடந்த சமயத்தில் உளவுத்துறை தலைவராக இருந்தவர் ஜாபர் சேட். 2006 ம் ஆண்டு தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி பெற்றதும்  உளவுத்துறை தலைவராக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டார். தி.மு.கழக ஆட்சியில் பெரும் செல்வாக்கோடு இருந்த ஜாபர் சேட் மீது  ஜெயலலிதாவுக்கு கடும்கோபம் உண்டு.

2011-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.கழகம் ஜெயித்தது ஆட்சயில் அமர்ந்ததும், ஜாபர் சேட் ராமநாதபுரம் மண்டபம் முகாமில்  அதிகாரமில்லாத பதவியில் அமர்த்தப்பட்டார். இடையில் பணி நீக்கமும் செய்யப்பட்டார். சமீபத்தில்தான். அந்த பணி நீக்கத்தை மத்திய தீர்ப்பாணையம் தள்ளுபடி  செய்தது. ஆனால், அ.தி.மு.கழக அரசு அதை ஏற்கவில்லை.

இன்று நடக்கும் வாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றி ல், ஜாபர் சேட்டுக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பதவி  அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.   அவரை
அப்படி ஒரு முக்கிய பதவிக்கு  வரவிடக்கூடாது என்று நினைக்கும் ஜாபர் சேட்டின் எதிரிகள்தான் இந்த அரியலூர் பிரபாகரனை தூண்டிவிட்டு, பத்திரிகையாளர்களை சந்திக்க வைத்தார்கள்” என்கிறார்கள்  அந்த காவல்துறை அதிகாரிகள்.

பிரபாகரன்
பிரபாகரன்

 

மருத்துவ அறிக்கை கூறுவது என்ன..

2011-ம் வருடம் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தடய அறிவியல் துறை தலைவராக இருந்தவர் டாக்டர்  டி கால் என்பவர்தான் சாதிக்பாட்சாவின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்தார். அந்த நேரத்தில்  அவருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் டி.கால்.

இவர், “சாதிக் பாட்சா ‘கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அவர் உயிர் போயிருக்கிறது’ என்றார்.  இது தூக்கில் தொங்கியதாலும் ஏற்பட்டிருக்கலாம், அல்லது யாராவது கயிறால் இறுக்கியதாலும் ஏற்பட்டிருக்கலாம்” என்றார்.

இவரது கருத்தை ஏற்காத சிபிஐ அதிகாரிகள்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டாக்டர் டோக்ரா என்பவரை  கொண்டு போஸ்ட்மார்ட்டம் செய்தனர். அவர், “தூக்கில் தொங்கியதால்தான் சாதிக் இறந்தார்” என்று அறிக்கை கொடுத்தார்.

ஆகவே சாதிக் மரணம் குறித்து அப்போதே சர்ச்சை ஏற்பட்டது.

இதற்கிடையே, இந்த அரியலூர் பிரபாகரன் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம், அய்யூர் கிராமம். இவரது தந்தை பெயர் கருப்பசாமி. பிரபாகரனுக்கு இரண்டு  இரண்டு சகோதரிகள். இருவரும் மணமாகி சென்றுவிட்டனர்.

பிரபாகரன் தந்தை கருப்பசாமி, தமிழர் விடுதலை படையை நடத்தி வந்த சுப. இளவரசனுக்கு நெருக்கமாக  இருந்துள்ளார். அவரின் கொள்கைகளில் ஆர்வம் கொண்ட கருப்பசாமி,  தனது மகன் பிரபாகரனையும் அந்த இயக்கத்தில் சேர்த்துவிட்டிருக்கிறார்.

ஒருகட்டத்தில் சுப. இளவரசன், பிரபாகரனை தனது உதவியாளராக வைத்துக் கொண்டார்.  அந்த பா.ம.கவின் முக்கிய தலைவராக காடுவெட்டி குரு  அதே “பெரிய” மனிதராக உருவாகி வந்தார்.அவருக்கு  ‘செக்’ வைக்க நினைத்த தி.மு.க மேலிடம், சுப. இளவரசனை வளர்த்துவிட்டது. அந்த தொடர்பில் ஆ.ராசா, ஆற்காடு வீராசாமி என தி.மு.க வின் முக்கிய புள்ளிகளோடு சுப.இளவரசனுக்கு நெருக்கம் ஏற்பட்டது.  இந்த நெருக்கத்தை பிரபாகரனும் பயன்படுத்திக் கொண்டார்

2010- ம் ஆண்டு, சென்னையில் இருந்த பிரபாகரன் தனது சொந்த கிராமமான அய்யூருக்கு திரும்பி வந்தார்.  தனது தந்தையிடம் தொழில் துவங்க பணம் கேட்டிருக்கிறார். தந்தை மறுக்கவே  அங்கிருந்து கிளம்பி திட்டக்குடியில் இருந்த தனது அக்காள் வீட்டிற்கு சென்றுள்விட்டார்.   அக்காள் கணவர் வாழை இலை மொத்த வியாபாரம் செய்து வந்ததால், அவரிடம் இலை வாங்கி ஆண்டிமடத்தில் இரண்டு ஆண்டுகள் இலை வியாபாரம் செய்து வந்தார் பிரபாகரன்.

பிறகு  2013 ம் ஆண்டு, மீண்டும் சென்னை சென்றவர், அதன்பின் சொந்த ஊர் பக்கம் வரவே இல்லை.
இந்நிலையில்தான் நேற்று திடீரென பிரபாகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து சாதிக் மரணம் பற்றி திடுக் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

பிரபாகரனை அறிந்தவர்கள், “பிரபாரகரன் அவ்வப்போது காணாமல் போய்விடுவான். அதாவது எங்கே இருக்கிறான் என்பதே தெரியாது. பிறகு திரும்பி வருவான்.  தி.மு.கவில் உள்ள பெரிய புள்ளிகள் பலர் தனக்கு நெருக்கம் என்பான். . அவனுக்கு மதுப்பழக்கம் உண்டு. குடித்துவிட்டு  போதையில் உளறுவான். ஆகவே அவன் சொல்வதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம்” என்கிறார்கள்.

மிக முக்கியமான இந்த விவகாரத்தில் இதுவரை அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா.. எல்லாவற்றுக்கும் மேல் சாதிக்பாட்சாவின் குடும்பத்தினர்.. யாருமே ஏதும் சொல்லாமல் மவுனம சாதிக்கிறார்கள் என்பது கவனிக்கத்கது.

 

 

You may have missed