2ஜி மேல்முறையீடு வழக்கு: விசாரணை பிப்ரவரி 7ந்தேதிக்கு ஒத்திவைப்பு

டில்லி:

2ஜி வழக்கில் இருந்து ராசா, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீடு மனுவின் விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

அமலாக்கத்துறையின்  மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும் என்று டில்லி உயர்நீதி மன்றம்  ஒத்தி வைத்துள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜா, கனிமொழி உள்பட பலர்மீது குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,  வழக்கில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறி சிபிஐ நீதிபதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து,  கடந்த ஆண்டு (2017)  டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அமலாக்கத்துறை சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்குக்காக அரசு தரப்பில் வாதங்களை எடுத்துரைப்பது உள்ளிட்ட பணிகளை கவனிக்க, மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் 2ஜி மேல்முறையீடு தொடர்பான வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ந்தேதிக்கு  ஒத்தி வைப்பதாக டில்லி உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது.