அக்டோபர் 5ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை: 2 ஜி மேல்முறையீடு வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு

--

டெல்லி: அக்டோபர் 5ம் தேதி முதல் நாள்தோறும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தனியார் தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் முறைகேடு நடந்ததாகவும், அரசுக்கு, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்கு தொடர்ந்தது.

வழக்கில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த, டெல்லி, சிறப்பு நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து, 2017ம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந் நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்குமாறு சிபிஐ, அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கை விரைவாக விசாரிக்க ஒப்புக்கொண்டது.  அக்டோபர் 5ம் தேதி முதல்  தொடர் விசாரணை நடைபெறும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.