2ஜி மேல்முறையீடு வழக்கு: ஓ.பி.சைனியிடம் இருந்து சிதம்பரத்தை திகாருக்கு அனுப்பிய நீதிபதி அஜய்குமார் குஹாருக்கு மாற்றம்!

டில்லி:

 2ஜி மேல்முறையீடு வழக்கு சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனியிடம் இருந்து, சிபிஐ சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் வசம் மாற்றப்பட்டு உள்ளது. நீதிபதி அஜய்குமார் குஹார், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் போன்றோரின் வழக்கை விசாரித்து, அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டவர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2007 – 2008ல், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது விதிகளைமீறி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததாகவும், இதன் காரணமாக 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டப் பட்டது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக ராஜா, கனிமொழி உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி சைனி, ‘சிபிஐ தரப்பில் குற்றத்தை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி  குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தார். இதை எதிர்த்துமத்திய அரசு முடிவு மேல்முறையீடு செய்தது. டில்லி உயர்நீதி மன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம்  19ந்தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ நீதிபதி ஓ.பி. சைனி விசாரித்து வருகிறார். வழக்கு  விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், 2ஜிமேல்முறையீடு வழக்கை  முன்னாள் நிதிஅமைச்சர் சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் விசாரணைக்கு  மாற்றப்பட்டு உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், உச்சநீதி மன்றம் சிதம்பரத்தை திகார் ஜெயிலில் அடைப்பதற்கு விதி விலக்கு அளித்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார் சிதம்பரத்தை 15 நாள் காவலில்  திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதுபோல,  கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் வழக்கையும் விசாரித்து, அவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், 2ஜி மேல்முறையீடு வழக்கு நீதிபதி அஜய்குமார் குஹார் வசம் மாற்றப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீதிபதி அஜய்குமார் குஹார் மத்தியஅரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக சமூக வலைதளங்களில் சிலர் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் நிலையில், 2ஜி மேல்முறையீடு வழக்கும் அவரது விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.