சென்னை,

நேற்று முன்தினம் வெளியாகி 2ஜி வழக்கு தீர்ப்பில் திமுகவை சேர்ந்த ராஜா, கனிமொழி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டது  குறித்து பாமக தலைவர் ராமதாஸ் எதிர்மறையான கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாமக தர்மபுரி தொகுதி எம்.பி.யான டாக்டர் செந்தில், 2ஜி வழக்கு குறித்து, திமுகவுக்கு ஆதரவாக தனது கருத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாமக தலைவர் ராமதாஸ், 2ஜி தீர்ப்பை, முந்தைய சர்க்காரியா கமிஷன் தீர்ப்போடு ஒப்பிட்டு குறிப்பிட்டிருந்த நிலையில், தலைமையின் கருத்துக்கு எதிராக தர்மபுரி எம்பி.யான டாக்டர் செந்தில் பதிவிட்டிருப்பது பாமக வில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தர்மபுரியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.ம.க-வைச் சேர்ந்த டாக்டர் செந்தில். அரசியல் மற்றும் சமூகம் குறித்து தனது பதிவுகளை அவ்வப்போது தனது முகநூல் வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். அதுபோல, தற்போது 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்தும் கருத்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில்  கணக்கு தணிக்கையாளர் வினோத் ராயின் தவறான கண்க்கீட்டின் காரணமாகவே இந்த முறைகேடு வழக்கு பதியப்பட்டதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

டாக்டர் செந்திலின் கருத்து குறித்து  பா.ம.க நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் செந்திலின் ஃபேஸ்புக் பக்க பதிவில் எழுதியிருப்பதாவது….

2ஜி அலைவரிசை வழக்கில் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் வழக்கு சம்மந்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பை ”தீக்குள் நுழைந்து தங்கள் தூய்மையை நிரூபித்திருப்பதாக’’ திமுக மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது. காங்கிரஸ் கட்சியின் மன்மோகன்சிங் எங்களைப் பற்றிய உண்மை வெளிப்பட்டிருக்கிறது என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.

அருண்ஜெட்லி இதுப் பற்றி ‘’ இந்தத் தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களுடைய தூய்மைக்கான சான்றிதழ் அல்ல. உச்ச நீதி மன்றம் 112 நிறுவனங்களுடைய அலைவரிசை ஒதுக்கீட்டை இரத்து செய்திருக்கிறது. மேல்முறையீடு நிச்சயம் செய்யப்படும்’’ என்று அறிவித்திருக்கிறார்.

மருத்துவர் அய்யா அவர்கள் சர்க்காரியா ஆணை அறிக்கையை நினைவூட்டி, ‘’அறிவியல் பூர்வமாக ஊழல் செய்ய கூடியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். எனவே மேல் முறையீடு செய்து நீதியை நிலை நிறுத்த வேண்டும்’’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் நடைபெற்ற பேரங்கள் என்ன, உண்மை என்ன என்பதை பொது அறிவுக்கு விட்டுவிடுகிறேன்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை உன்னிப்பாக கவனிக்கிறேன். இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கபில்சிபல் அவர்கள் ‘’நாட்டை தவறாக வழி நடத்திய தற்காக முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா (Comptroller and Auditor General (CAG) of India) வினோத்ராய் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று கூறி இருக்கிறார்.

வினோத்ராய் இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக இருந்தப் போது தான் 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு ஆய்வு செய்யப்பட்டு ‘’இதனை சரியான முறையில் விட்டிருந்தால் 1,75,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்திருக்கும். 2ஜீ அலைக்கட்டு ஒதுக்கீட்டில் ராஜா கையாண்ட முறையால் அரசுக்கு ரூ. 1,75,000 கோடி இழப்பு ஏற்பட்டது’’ என்று சொல்லி இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதை வட இந்திய பத்திரிக்கைகள் மிகப் பிரமாண்டப்படுத்தி ‘’உலக ஊழல் வரலாற்றிலே மிகப் பெரிய ஊழல்’’ என்று குற்றம் சுமத்தினர்.

வினோத்ராய் எழுதிய NOT JUST AN ACCOUNTANT என்றப் புத்தகத்தை நான் படித்தேன். அந்தப் புத்தகத்தை படித்தப் பொழுது ஏறக்குறைய விஜயகுமாரின் CHASING A BIRGAND – THE VEERAPPAN STORY என்ற புத்தகத்தைப் படித்தப் போது ஏற்பட்ட உணர்வுகள் தான் எழுந்தன.. அந்த புத்தகத்தின் NOT JUST AN ACCOUNTANT என்ற தலைப்பையே ‘’நான் அதற்கும் மேலே’’ என்கிற ஒரு ஆணவத்தின் பிரதிபலிப்பாக தான் உணர்ந்தேன். புத்தகத்தை படிக்கத் துவங்கியதில் இருந்தே வினோத்ராய்க்கு தன்னைப் பற்றிய தலைக்கனம் இருந்ததை அறிந்து கொள்ள முடிந்தது.

இந்தத் தலைகனத்தைப் பற்றி இப்பொழுது கூறுவதற்கு காரணம் அது இந்திய அரசியல் அமைப்பில், இந்திய நாட்டில் சில அதிகாரிகளுக்கு இருக்கிற ஆணவம். குறிப்பாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுடைய எஜமான்களாக மாறி இருக்கிற ஜனநாயக உண்மையை மறுக்கிற ஆணவம். வினோத்ராய் முதன் முதலாக IAS அதிகாரியாக கேரளாவில் பணியாற்றிய காலத்திலேயே அந்த மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், அதன் அமைச்சர்களையும் விட தான் அறிவாளியாகவும், நேர்மையாகவும் காட்டிக்கொள்ள முயற்சி செய்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தான் உயர்ந்தவர் என்ற எண்ணத்தையும் காண முடிந்தது.

நான் அதிகாரிகளுக்கு ஜனநாயக அரசிலே எந்த இடமும் இல்லை, எல்லாம் மக்கள் பிரதிநிதி தான் எல்லாம் என்பது போன்ற கருத்தை முன் வைக்கவில்லை. தமிழகத்திலே உதயசந்திரன் என்ற மிக நேர்மையான அரசு அதிகாரி இருக்கிற காரணத்தினால் தான் பள்ளிக் கல்வித்துறையில் சீரிய திருத்தங்கள் வந்திருக்கின்றன. அவர் ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்பதை நிரூபித்து இருக்கிறார். அதே போல தமிழ்நாடு சுகாதார திட்ட குழுமத்தின் தலைவராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி அதிமுக அரசு தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஊழல் செய்ய முயன்ற போது தன்னால் இயன்ற அளவிற்கு அதற்கு முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறார். ஒரு அதிகாரி ஊழலுக்கு எதிராக நின்று நிலை நிறுத்திய சம்பவங்களும் உண்டு.

ஆனால் அதே சமயம், ஒரு அதிகாரி தன்னை அரசியல் அமைப்புக்கே மேம்பட்டவனாக நினைக்கிற போது – குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களின் மக்கள் பிரதிநிதிகள் தனக்கு எஜமானராக வரும்போது, சில மேல்தட்டு அரசு அதிகாரிகள் நடந்துக் கொள்ளும் முறையில் ஒரு ஆணவம் அல்லது கர்வம் இருக்கிறது. வினோத் ராய் தன்னுடைய புத்தகத்தில் ‘’நான் ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி, நான் நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழு கூட்டத்திற்கு செல்லும் பொழுது முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினராக வருகிற ஒருவரெல்லாம் எனனைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார். அவருக்கு என்ன தெரியும்’’ எனப் பதிவிட்டிருக்கிறார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 15 இலட்சம் மக்களுடைய பிரதிநிதி, அரசியல் அமைப்பின் மிக முக்கியமான அங்கம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தன்னைக் கேள்வி கேட்பதை, நாடாளுமன்றத்தின் மிக முக்கியமான குழுவான பொதுத் கணக்குக் குழுவின் (PUBLIC ACCOUNTS COMMITTEE) உறுப்பினர் கேள்வி கேட்பதையே தனக்குக் கீழான விஷயமாக நினைக்கிறவர் வினோத் ராய். அந்த அளவுக்கு ஆணவம் அவருக்கு இருக்கிறது.

2ஜி அலைவரிசை விவகாரத்தை வினோத் ராய் தணிக்கை செய்த போது இதை வெளிப்படை தன்மையோடு, நியாயமாக செய்ய வேண்டும் என்பதை விட நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய அமைப்பை விட தான் பெரிய ஆள் என்ற ஆணவத்தின் அடிப்படையில் தான் தணிக்கை செய்திருக்கிறார்.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்கள் மிகப் பெரிய ஊழல்களைக் கண்டுப்பிடித்திருக்கிறார்கள். போபார்ஸ் பேர ஊழலை கண்டுபிடித்தது. CAG தான்

வினோத் ராயைப் பொறுத்தவரை தேசபக்தியும், நேர்மையும் இவருடைய கண்டுப்பிடிப்புக்கு அடிப்படையாக இல்லை. மாறாக, அவரிடம் அடிப்படையாக இருந்த ஆணவமும், ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய அவருக்கு இருந்த ஒரு இளக்காரமும் தான் காரணம்.

இப்படிப்பட்ட அதிகாரிகள் ஜனநாயகத்திற்க்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் எதிரானவர்கள்.

இந்த வழக்கு மேல்முறையீட்டுக்குப் போகலாம். திராவிட முன்னேற்றக் கழக குற்றவாளிகள் தண்டிக்கப் படலாம்.

ஆனால் இன்றைக்கு வினோத்ராய் போன்ற ஒரு சாதி ஆணவமிக்க ஒரு அதிகாரியின் திமிருக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. கபில்சிபல் கேட்டது போல அவர் நாட்டு மக்கள் முன்னால் மன்னிப்பு கேட்க வேண்டும். அதே போல இந்த வழக்கு தீர்ப்பை ஒட்டி அன்றைக்கு தேர்தல் கமிஷன் தலைவராக இருந்த ஒருவர் ‘’நாடாளுமன்றத்திற்கு சிறிய கட்சிகளில் இருந்து வருபவர்கள் அமைச்சர்களாக ஆகக் கூடாது’’ என்ற ஜனநாயக விரோதக் கருத்தையெல்லாம் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், 2ஜி ஊழல், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் வளர வேண்டும். பிராந்திய கட்சிகள் அங்கம் பெற்று நாடாளுமன்ற ஆட்சிமுறை கூட்டாட்சியாக செம்மைப்பட வேண்டும் என்ற கருத்திற்கு எதிரான கருத்தாக, சிறிய கட்சிகள் நடுவன் அரசிலே முக்கிய அமைச்சர் பதவியை பெறக் கூடாது, தேசியக் கட்சிகள் தான் பெற வேண்டும் என்ற வாதத்தை முன்னிறுத்துவதற்காகவும் பயன்பட்டது.

இந்த வாதங்கள் எல்லாமே எதிர்க்க வேண்டிய வாதங்கள். இந்த வாதங்களுக்கான தோல்வியாகத் தான் 2ஜி வழக்கின் தீர்ப்பை பார்க்க வேண்டும். இன்றைக்குக் காலையில் கூட ஆங்கில தொலைக்காட்சிகளில் மிகப்பெரிய தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்போடு, இந்திய வரலாற்றின் மிகப் பெரிய தீர்ப்பு என்றெல்லாம் இதை பொய்யாக பிரமாண்டப்படுத்தி காட்டினார்கள். அந்த ஊடகங்களுக்கும் இது ஒரு அதிர்ச்சியாக இருக்கும்.

இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு எப்படியாக இருந்தாலும் இரண்டு விஷயங்களை என் அளவில் மகிழ்வோடு பார்க்கிறேன்.

1. வினோத்ராய் போன்ற கர்வம் பிடித்த அதிகாரிகளுக்கான மூக்கறுப்பாக நான் பார்க்கிறேன்.

2. எளிய குடும்பத்தில் பிறந்த, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் ஒரு வழக்கை துணிவுடன் எதிர்கொண்டு, ஒரே ஒருமுறை கூட வாய்தா வாங்காமல் தொடர்ந்து உறுதியான கருத்துக்களைப் பேசி, ஒரு புன்னகையோடு வழக்கை சந்தித்து வெற்றி கண்டதையும் நான் மகிழ்ச்சியோடு தான் பார்க்கிறேன்.

ஒடுக்கப்பட்ட சமுதாயங்கள் தான் இனி இந்தியாவை வழி நடத்தும் என்ற எதிர்கால அரசியலின் துவக்கமாகத் தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு டாக்டர் செந்தில் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.