2வது நாள்: முதல்வரின் நண்பர் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை!

--

சென்னை,

மிழக முதல்வர் ஓபிஎஸ்-சின் நண்பரான ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கருப்பு பணம், கள்ளப்பணம் ஒழிப்பில் தீவிரமாக செயல்பட்டுவரும் மத்திய அரசு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த மாதம் பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து வருமான வரித்துறையினர் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர். தொடர்ந்து நாடு முழுவதும் பழைய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பவர்களை பிடிக்க அதிரடி வேட்டைகள் முடுக்கி விடப்பட்டன.

மேலும் தங்கம் வாங்கி குவிப்பவர்கள் குறித்தும்  ரகசியமாக விசாரணை நடத்தி இந்தியா முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தங்கத்தையும்  பறிமுதல் செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த வாரம் பெங்களுரில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது.

தற்போது, நேற்று முதல் சென்னையில் ரெய்டு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மணல் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் ஆந்திராவை சேர்ந்த பிரபல கனிமவள தனியார் நிறுவனம் குறித்து , வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் அதிபரான தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

தி.நகர் யோகாம்பாள் சாலையில் தொழில்அதிபர் சேகர் ரெட்டியின் வீட்டுக்கு,வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு குழுவாக சென்று சோதனை நடத்தினர்.

அவரது சகோதரரான சீனிவாச ரெட்டியின் வீடு தி.நகர் விஜயராகவா சாலையில் உள்ளது. மற்றும் அவரது  நண்பர் பிரேமின் வீடு முகப்பேரில் உள்ளது. 2 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஆந்திரா கிளப், காட்பாடி காந்தி நகரில் உள்ள சேகர் ரெட்டியின் வீடு, தி.நகரில் உள்ள சேகர் ரெட்டியின் நிறுவனம் உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் 160 அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  இவர்கள் 8 குழுக்களாக தனித்தனியாக பிரிந்து அங்குலம் அங்குல மாக சோதனையிட்டனர்.

நேற்று காலையில் தொடங்கிய இந்த சோதனை இரவு வரையிலும் நீடித்தது. இதில் கணக்கில் வராத பணம் கட்டு கட்டாக சிக்கியது. கிலோ கணக்கில் தங்கமும் பிடிபட்டது. இன்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை  மொத்தம் 106 கோடி ரூபாய் பணமும், 127 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதில் 96 கோடி ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகளாக இருந்தது. மீதம் உள்ள 10 கோடி ரூபாய் புதிய கரன்சி நோட்டுகளாக இருந்தன.

இந்த 10 கோடி ரூபாயும் புதிய 2 ஆயிரம் நோட்டுகளாகவே இருந்தன. இதனை பார்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

106 கோடி ரூபாய் பணம், 127 கிலோ தங்கம் ஆகியவற்றுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் முறையாக கணக்கு கேட்டுள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த பணமும், நகையும் மணல் குவாரிகளை பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்ததா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

இதற்கு உடந்தையாக அதிகாரிகள் சிலர் செயல்பட்டிருப்பதாகவும் தக வல்கள் வெளியாகி உள்ளன. வருமான வரித்துறை விசாரணையில் அது உண்மை என்பது தெரியவந்தால் அதிகாரிகள் சிக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

வருமான வரித்துறையினரின் பிடியில் சிக்கியுள்ள சேகர் ரெட்டியின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொன்டான் துளசி கிராமம் ஆகும். தற்போது காட்பாடி காந்தி நகரில் பங்களா வீட்டில் வசித்து வருகிறார்.

சேகர் ரெட்டி உறவினர் சீனுவாச ரெட்டி, நண்பர் பிரேம் வீடுகளில் இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. தி.நகர் விஜயராகவ ரோட்டில் உள்ள வீட்டில் நேற்று நள்ளிரவு 2 மணி வரை ரெய்டு நடந்து முடிந்த்து

.இந்நிலையில்,  தி.நகர்  சாம்பசிவம் தெருவில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிலும், தி.நகர் யோகாம்பாள் தெரு, பசுபுல்லா ரோடு ஆகியவற்றில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆரம்ப காலத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த சேகர்ரெட்டி படிப்படியாக வளர்ந்து மிகப் பெரிய தொழில் அதிபராகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போதைய தமிழக முதல்வரின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.