2வது டி20 போட்டி: அயர்லாந்துக்கு எதிரான  தொடரை கைப்பற்றியது இந்திய அணி

ங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இந்திய கிரிக்கெட்  அணி  அயர்லாந்துடன் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே முதலாவது நடைபெற்ற டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்று நடைபெற்ற 2வது ஆட்டத்திலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்தின்   டப்ளின் மைதானத்தில் நேற்று ஆட்டம் நடைபெற்றது. போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற அயலாந்து அணி கேப்டன், இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது.

இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக  கேஎல் ராகுல், விராட் கோலி இணை களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் கோலி அதிரடியாக  விளையாடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,  9 ரன்கள் எடுத்த நிலையில் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து ரெய்னா களமிறங்கி அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து. ரெய்னா ராகுல் இணை சரமாரியாக வெளுத்து வாங்கியது. ராகுல் 36 பந்துகளில் 70 ரன்களும், ரெய்னா 45 பந்துகளில் 69 ரன்களும் எடுத்து ஆட்ட மிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய ரோஹித் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பிய நிலையில்,  மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் கடைசி கட்டத்தில் அதிரடியை தொடர ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இந்திய அணி 20 ஓவர் முடிவில்,  200 ரன்களை கடந்த 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து வீரர்கள் தொடக்கத்திருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில்,  12.3 ஓவர் முடிவில் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தனர்.

இந்திய தரப்பில் சாஹல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும்,  உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், சித்தார்த் கவுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை சாஹல் வென்றார்.

இதன் காரணமாக அயர்லாந்துக்கு எதிரான  தொடரை கைப்பற்றிய இந்திய அணி சாதனை படைத்துள்ளது.