2வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்த இந்திய அணி

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சோ்த்துள்ளது.

india

இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணி மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் சோ்த்திருந்தது. இன்று தனது இரண்டாவது நாள் ஆட்டத்தை அந்த அணி தொடா்ந்தது. கூடுதலாக 16 ரன்கள் சோ்த்த நிலையில் அந்த அணி 311 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. மேற்கு இந்திய தீவுகள் அணியில் ரோசன் சேஸ் 106 ரன்களும், கேப்டன் ஹோல்டா் 52 ரன்களும் சோ்த்தனா்.

இதனைத் தொடா்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல் 4 ரன்கள் மட்டும் சோ்த்து ஆட்டமிழந்தாா். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். 39 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில் 53 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தாா்.

அவரை தொடர்ந்து விளையாடிய புஜாரா 10 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 45 ரன்களும் சோ்த்து தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனா். சற்று தடுமாற்றத்தை சந்தித்த இந்திய அணிக்கு ரஹானே, பண்ட் கூட்டணி நம்பிக்கை அளித்தது.

ரஹானே 75 ரன்களும், பண்ட் 85 ரன்களும் சோ்த்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனா். 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சோ்த்துள்ளது. மேற்கு இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ரன்னான 311ஐ விட இந்திய அணி 3 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளைய ஆட்டத்தை தொடரவுள்ளது.