டில்லி:

மத்திய வனத்துறையில் 2017ம் அறிக்கையை சுற்றுசூழல் அமைச்சர் ஹர்ஸ் வர்தன் டில்லியில் இன்று வெளியிட்டார்.

அப்போது அவர் அறிக்கை குறித்து கூறுகையில், ‘‘நாட்டில் மொத்தம் 7 லட்சத்து 8 ஆயிரத்து 273 சதுர அடி வனப்பரப்பு உள்ளது. இந்திய புவியியல் பரப்பளவில் இது 21.54 சதவீதமாகும். மரங்களின் பரப்பளவு 93 ஆயிரத்து 815 சதுர கி.மீ., உள்ளது. இது 2.85 சதவீதமாகும்.

உலகளவில் வனப்பரப்பு குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்பது மகிழ்ச்சியான விஷயம். 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை இந்தியாவின் வனப்பரப்பு 6 ஆயிரத்து 778 சதுர கி.மீ., அதிகரித்துள்ளது. இது 0.21 சதவீதம் அதிகரிப்பாகும்.

இதன் மூலம் இந்தியா தற்போது உலகளவில் 10வது இடத்தில் உள்ளது. வருடாந்திர வன ஆதாயத்தில் 9வது இடத்தில் உள்ளது. மக்கள் தொகை நெருக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவுக்கு மேல் உள்ள 9 நாடுகளும் 150 என்ற அளவீடுகளில் உள்ளது. இதில் இந்தியா 350 என்ற அளவீடுகளில் இருப்பது சிறப்பான விஷயம். மக்கள் தொகை நெருக்கடி மற்றும் கால்நடைகள் அழுத்தத்தையும் மீறி வனப் பாதுகாப்பு மற்றும் விரிவாக்கத்தில் இந்தியா சிறப்பான பணியாற்றி வருகிறது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘2 ஆயிரத்து 141 சதுர கி.மீ., அதிகரிப்புடன் ஆந்திரா முதலிடத்திலும், ஆயிரத்து 101 சதுர கி.மீ., அதிகரிப்புடன் கர்நாடகா 2வது இடத்திலும், கேரளா ஆயிரத்து 43 சதுர கி.மீட்டருடன் 3வது இடத்திலும் உள்ளது. 2015ம் ஆண்டில் அடர்ந்த காடுகளின் பரப்பளவு 88 ஆயிரத்து 633 சதுர கி.மீ., என்ற அளவில் இருந்து 98 ஆயிரத்து 158 சதுர கி.மீ., பரப்பளவு வரை விரிவடைந்துள்ளது.

12 மாநிலங்கள், யூனியன் பிரதேங்களில் வனப்பரப்பளவு குறைந்து வருவது என்பது சோகமான செய்தியாக உள்ளது. சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, சி க்கிம், அருணாச்சல், திரிபுரா ஆகிய மாநிலங்கள் இத்தகை போக்கு நிலவுவது வருத்தமளிக்கிறது’’ என்றார்.