haldhar nag
ஹல்தர் நாக்

மூன்றாம் வகுப்பில் பெயில். உள்ளூர் இனிப்புக் கடையில் பாத்திரம் கழுவும் வேலை. இப்படி வாழ்க்கையைத் தொடங்கியவ‌ரால் என்ன செய்துவிட முடியும்?  அதிகமில்லை ஜென்டில்மேன்…  இந்தியாவின் உயரிய விருதான‌  பத்மஸ்றீ விருதை இந்தியாவின் முதல் குடிமகன் கரங்களால் வாங்க முடிந்திருக்கிறது. அதுவும் மாபெரும் கவிஞனாக.
அந்த பெருமைக்குச் சொந்தக்காரர் ஹல்தர் நாக். இவர் ஒடிசா மண்ணில் பிறந்தவர். தன்னுடைய கொஸ்லி மொழியில் ஏராளாமான கவிதைகளையும் 20 காவியங்களையும் படைத்தவர்.
ஒரியா இலக்கியத்தில் ஹல்தார் நாக்கின்  பங்களிப்பு மிகவும் அதிகம். 3 ஆம் வகுப்புக்கூட தாண்டாத ஹல்தார் எழுதிய கவிதைகளை 5 பேர் பி.எச்.டி.ஆராய்ச்சி பட்டத்துக்கு  தேர்வு செய்துள்ளனர்.மேலும் பிபிசி செய்தி நிறுவனம் கூட இவரின் இலக்கிய வாழ்க்கை பற்றி ஆவண‌ப்படம் எடுத்திருக்கிறது. சம்பல்பூர் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில்  இவருடைய கவிதைத் தொகுதிகள் பாடமாக‌ சேர்க்கப்பட்டுள்ளன.
எப்போதும் வேட்டியும்  சட்டையுமே இவருடைய உடை. காலணிகளை காணாத பாதங்கள் இவருடையவை. வெற்றுப் பாதங்களுடன் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறார். இவர் செல்லும் எல்லா இடங்களிலும் இவருடைய கவிதைகள் ஒலிக்கின்றன.
1950-ல் ஒடிசாவின் பர்கார்ஹ் மாவட்டத்தில்  ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த ஹல்தார் ந்ஹாக் ,  3 ஆம் வகுப்பு முடிப்பதற்கு முன்பே தன்னுடைய தந்தையை இழந்தார்.படிப்பைத் தொடரமுடியாத அளவிற்கு வறுமையின் கொடுமை. வேலைக்குச் செல்ல வேன்டிய கட்டாயம். அப்போதுதான் உள்ளூர் இனிப்புக் கடையில் ஒரு பாத்திரம் கழுவியாய் வாழ்க்கையைத் துவங்கி இருக்கிறார்.
பின்னர் 2 ஆண்டுகளுக்குப்பிறகு உயர் நிலைப்பள்ளிக்குச் சென்றிருக்கிறார். அங்கு சென்றது படிப்பதற்காக அல்ல‍‍; சமைய‌ல்காரராக. 16 ஆண்டுகள் அதேபள்ளியில் சமையல் வேலையில் தொடர்ந்திருக்கிறார். அதன்பின்னர் சிறிய பெட்டிக் கடையை துவக்கி இருக்கிறார்.அதில் பள்ளிக் குழந்தைகளுக்கான எழுதுபொருள்களையும், தின்பண்டங்களையும் விற்பனை செய்துள்ளார்.
1990 இல் தனது முதல் கவிதையை எழுதத் தொடங்கினார். ‘பழைய ஆலமரம்’ எனப் பெயர் சூட்டப்பட்ட அந்தக் கவிதைத் அந்த ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. அவருடைய கவிதைக்கு கிடைத்த வரவேற்பும் வாழ்த்துகளும் அவரை இன்னும் தீவிரமாய் கவிதைகள் எழுதத் தூண்டின.இப்பொழுது அவருடைய கவிதைகள் உலக அங்கீகாரம் பெற்றவைகளாக அணிவகுத்து நிற்கின்றன.
அவருடைய கவிதைகள் அரசியல், சமூகம், அறிவியல் என பலதுறைகளை கருப்பொருளாகக் கொண்டவை. ஹல்தர் நாக் ஒரியாவின் மிகப்பெரும் கவிஞர் கங்காதர மெஹருக்கு இணையாகப் பார்க்கப்படுகிறார்.