மூன்று அமெரிக்கக் கைதிகளை விடுவித்த வடகொரியா

 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் – வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு நடக்க இருக்கும் விலையில் மூன்று அமெரிக்கக் கைதிகளை வட கொரியா விடுவித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதனை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வட கொரியா சென்றிருந்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ அந்த விடுவிக்கப்பட்ட மூவருடன் விமானத்தில் வந்துகொண்டிருப்பதாகவும் அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னுடன்  சந்திப்புக்கான இடமும் நேரமும் குறிக்கப்பட்டுள்ளது என்றும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட மூன்று கைதிகளில் ஒருவர் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். மற்ற இருவரும் ஒரு வருடத்துக்கும் மேல் சிறையில் இருப்பவர்கள். அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது அரசியல் என்றும், மனித உரிமை மீறல் என்றும் பரவலாக கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.