கொல்கத்தா அருகே தேவாலயம் மீது குண்டுவீசிய மர்ம நபர்கள்: தப்பியோடிய பொதுமக்கள், 3 பேர் கைது

--

கொல்கத்தா:  மேற்கு வங்க மாநிலத்தில் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மிட்னாபுர் மாவட்டத்தில் உள்ள பகவான்பூர் என்ற இடத்தில் தேவாலயம் ஒன்று உள்ளது. அந்த தேவாலயத்துக்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, திடீரென கையில் வைத்திருந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

தாக்குதலின் போது உள்ளே வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஏராளமானோர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். வெடிகுண்டு தாக்குதலால் அதிர்ந்த அவர்கள் பீதியில் சிதறி ஓடினர்.

அப்போது உள்ளே ஆவேசமாக ஓடி வந்த மர்ம நபர், ஆலயத்தின் உள்ளே இருந்த பொருட்களை சூறையாடினார். மேசை, நாற்காலி என அனைத்து பொருட்களையும் அடித்து உதைத்தனர்.

இந்த தாக்குதல் குறித்து பாதிரியார் தரப்பில் இருந்து புகார் தரப்பட்டது. அதன்பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்றிருந்த நிலையில் மேற்கு வங்கத்தில் முதல்முறையாக தேவாலயம் தாக்கப்பட்டிருக்கிறது.