நாகை:

நாகப்பட்டினத்தை இரண்டாக பிரித்து, மயிலாடுத்துறையை தலைமையிடமாக கொண்டு  புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த நடைபெற்ற புதிய கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதன்படி, மயிலாடுத்துறை, பூம்புகார், சீர்காழி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் இடம்பெற உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம்  ஒரத்தூரில் 60.4 ஏக்கர் பரப்பளவில் ரூ.366 கோடியே 85 லட்சம் மதிப்பில் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகள் அடங்கிய 21 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இங்கு 2020-2021-ம் கல்வி ஆண்டில் 150 மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர்,  நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை யில் ரூ.150 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க உள்ளோம். இதனால் ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, பு‌‌ஷ்பவனம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மீனவர்கள் பயன்பெறுவார்கள்.

மாநிலத்தில் புதியதாக அரசு மருத்துவக்கல்லூரிகளை ஏற்படுத்தி வருகிறோம்… இதை கொண்டு வந்துள்ளதன் மூலம் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் நிலையை உருவாக்கி உள்ளோம். தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும். ஆனால் ஏழைகளுக்கு கட்டணம் இல்லமல் சிகிச்சை அளித்து குணப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளோம்.

நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க அரசின் பரிசீலனையில் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் வைத்த இந்த கோரிக்கை விரைவாக, துரிதமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் என்றும், மாவட்டத்தை பிரிப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளதாகவும் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.