அமராவதி:

ந்திராவுக்கு 3 தலைநகரங்களை உருவாக்கம் திட்டம் உள்ளதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கடந்த 2014ம் ஆண்டு, ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத் தலைநகராக சென்றுவிட்டதால், ஆந்திராவுக்கு புதிய தலைநகரமாக அமராவதியை அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். குண்டூர் மாவட்டம் கிருஷ்ணா நதிக்கரையில் எழில்கொஞ்சும் பிரமாண்டமான தலைநகரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதைச்சுற்றி , உயர் நீதிமன்றம், சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலங்களும் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

தலைநகர் உருவாக்க அப்பகுதி விவசாயிகள் தாமாக முன்வந்து 33 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கினர். முதற்கட்டமாக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. புதிய தலைமைச் செயலகத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு அரசு ஆட்சி நடைபெற்றது.

ஆனால், கடந்த மே மாதம் (2019) நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி தோல்வி அடைந்தது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி முதல்வராக பதவியேற்றார். ‘

அவர் முதல்வரானதும் சந்திரபாபு நாயுடு அரசின்  பல்வேறு திட்டங்களை மாற்றி அமைத்து வருகிறார். அதையடுத்து, அமராவதியை உருவாக்கும் திட்டமும் மாற்றி அமைக்கப்படுவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது,  ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன்மோகன்  அறிவித்து உள்ளார்.

‘புதிய திட்டத்தின்படி அமராவதி சட்டமன்ற தலைநகராகவும் விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும் (தலைமைச் செயலகம்), கர்னூல் சட்டத் தலைநகராகவும் (உயர் நீதிமன்றம்) விளங்கும்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நாகேஸ்வர ராவ் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த குழு 10 நாட்களில் ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்று கூறியவர்,  மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களும் வளர்ச்சி அடையும் வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகரம் அமைக்கும் திட்டம் குறித்து நாம் விவாதிக்க வேண்டும்’ என்றார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்புக்கு தெலுங்குதேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.