ஊழல் குற்றச்சாட்டு: கெஜ்ரிவால் மீது 3 வழக்கு பதிவு!

டில்லி,

ம்ஆத்மியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் கெஜ்ரிவால் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி கூறி உள்ளார்.

டில்லி ஆம்ஆத்மியில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் காரணமாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் கபில்மிஸ்ரா.

அதைத்தொடர்ந்து கபில் மிஸ்ரா டில்லி சிபிஐ அலுவலகம் சென்று புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கி யதை நேரில் பார்த்ததாகவும், அவர்  சட்டவிரோத நில பேரங்களில் ஈடுபட்டதாகவும், அவரது உறவினர்கள் எப்படி பலன் அடைந்தனர் என்பது பற்றி ஒரு புகாரும், சட்டவிரோத பணத்தை பயன்படுத்தி சத்யேந்தர் ஜெயின், ஆசிஷ் கேட்டன், சஞ்சய் சிங் உள்ளிட்டவர்கள் பலன் அடைந்தது பற்றி மற்றொரு புகாரும் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து டில்லி முதல்வர் அரவிந்த் அவரது மைத்துனர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

சாலை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளுக்கு முறைகேடாக கான்ட்ராக்ட் வழங்கிய புகாரின் பேரில் இந்த 3 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மூன்று வழக்குகளில் ஒன்று ரேணு என்ற கட்டுமான கம்பெனியின் உரிமையாளர் மறைந்த சுரேந்தர் பன்சால் மீது பதியப்பட்டுள்ளது. இவர் முதல்வர் கெஜ்ரிவாலின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் மோசடி தொடர்பான பிரிவுகளின் கீழ் இந்த மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த புகார் குறித்து விளக்கம் அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை  அதிகாரி முகேஷ் மீனா,  இந்த வழக்குகள் சர்மா என்பவர் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வும்,

முதல்வர் கெஜ்ரிவால், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது மைத்துனர் பன்சாலுக்கு தேவையான உதவிகளை செய்ததாகவும், இதனால், கெஜ்ரிவால், பன்சால் மற்றும் அரசு அதிகாரி ஒருவர் மீது சர்மா புகார் அளித்ததாக கூறினார்.

இந்நிலையில், பன்சால் உயிரிழந்ததால், மற்ற இரண்டு குற்றவாளிகளான கமல் சிங் மற்றும் பவன் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகேஷ் மீனா, உறுதியளித்தார்

இது டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.