டெல்லி: தலைநகர் டெல்லியில் 3 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டால் அந்த பகுதி சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தைக் கடந்தாலும், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழகம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் புதிதாக 1211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகளவாக மகாராஷ்டிராவில் 2,334 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டெல்லி இருக்கிறது. இந் நிலையில், 3 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டால் அந்த பகுதி சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: டெல்லியில் இப்போது 47 சிவப்பு மண்டலங்கள் உள்ளன. நாங்கள் இப்போது அளவுகோல்களை மிகவும் கடுமையானதாக ஆக்கியுள்ளோம்.

முன்னதாக ஒரு பகுதி 10 அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா தொற்றுகள்  கண்டறியப்பட்டால் சிவப்பு மண்டலம் என்று அறிவிக்கப்படும். இப்போது, ஒரு பகுதியில் 3 தொற்றுகள் கண்டறியப்பட்டால், அது ஒரு சிவப்பு மண்டலம் என்று அறிவிக்கப்படும் என்றார்.