திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் நகைபறிப்பில் ஈடுபட்ட 3 கில்லாடி பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓடும் வாகனங்களில் திருடுகள் நடைபெற்று வருவதாக பல புகார்கள் உள்ளன. இந்த நிலையில்,  வாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் பயணியிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக பயணிகளின் புகாரின் பேரில் போலீசார் கைதுசெய்தனர்.

சம்பவத்தன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் என்பவர்  ஓசூரில் இருந்து தனது குடும்பத்துடன் அரசுப்பேருந்தில் சென்னைக்கு திரும்பியுள்ளார். பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குத்தி சுங்கச்சாவடிக்கு வந்தபோது, பேருந்தில் இருந்த 3 பெண்கள், ஹரிகிருஷ்ணனின் பையில் இருந்த 3 சவரன் தங்க நகையை திருடிக்கொண்டு, சுங்கச்சாவடியில் பேருந்து நின்றபோது தப்பியோட முயற்சித்தனர்.  இதுகுறித்து பேருந்தில் உள்ள ஹரிகிருஷ்ணன் குடும்பத்தினர் சத்தம்போடவே, அந்த பெண்களை  சுங்கச்சாவடி ஊழியர்கள் மடக்கிப்பிடித்தனர். இதுகுறித்து அருகே உள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  அம்பலூர்  போலீசார் அந்த பெண்களை கைது செய்தனர்.  அப்போது ஒருபெண், போலீசாரிடம் இருந்து தப்பிஓட முயற்சித்தார். அவரை , போலீசார் விரட்டிப்பிடித்தனர். இதில் கல்பனா என்ற பெண் காவலருக்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து 3 பெண்கள்  மீதும் வழக்குப்பதிந்து, கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டு ஹரிகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.