டில்லி

ந்திய வருமான புலனாய்வுத் துறையினர் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வந்த 21 கிலோ தங்கத்தைக் கைப்பற்றி மூவரைக் கைது செய்துள்ளனர்.

இந்தியாவுக்கு சீனா, தைவான், ஹாங்காங் போன்ற இடங்களில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல்கள் வந்தன.   அதையொட்டி இந்திய வருமான புலனாய்வுத் துறை விசாரணை நடத்தியதில் இதில் ஒரு பெரிய குழு உள்ளது தெரியவந்தது. இவர்கள் இ காமர்ஸ்  பெயரில் கொரியர் மூலம் தங்கத்தை வீட்டு உபயோகப் பொருள் என கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

இதையொட்டி சோதனையில் ஈடுபட்ட துறையினர் கடந்த திங்கள் அன்று கடத்தி வரப்பட்ட 21 கிலோ தக்கத்தை கைப்பற்றி உள்ளனர்.   இந்த தங்கக் கடத்தலில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   அவர்கள் சீனா மற்றும் தைவானை சேர்ந்தவர்கள் ஆவார்கள்

முதல் கட்ட விசாரணையில் இவர்கள் வீட்டு உபயோகப் பொருட்களில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவது தெரிய வந்துள்ளது.    இம்முறை அவர்கள் தைவானில் இருந்து ஆர் ஓ நீர் சுத்திகரிப்பு ஃபில்டர்களில் மறைத்துத் தங்கத்தை எடுத்து வந்துள்ளனர்.  பிறகு அதை உருக்கி விற்கத் திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிடிபட்ட 21 கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ.7.62 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   பிடிபட்டவர்களில் ஒரு சீன நபர் இந்த கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளி எனக் கூறப்படுவதால் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.   இந்த விசாரணை முடிவில் மேலும்  பல கைதுகள் நடக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.