நெல்லை,

நாகர்கோவிலில் இருந்து கடத்தி சென்ற 3 கோடி ரூபாய் பழைய நோட்டுக்கள் நெல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து  12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர்  இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் தம்மிடம் உள்ள 3 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயபால் என்ற புரோக்கரை அணுகி உள்ளார். அவர்மூலம் நெல்லை வேப்பங்குளத்தில் உள்ள மற்றொரு நபர் மூலம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக  கூறியதையடுத்து, பால்ராஜ் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் நெல்லை நோக்கி வந்துள்ளார்.

கார், வேப்பங்குளம் அருகே கார் வந்தபோது மர்மநபர்கள் சிலர் காரை வழிமறித்து பால்ராஜை அடித்துப் போட்டு விட்டு 3 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ், தரகர் ஜெயபாலை தேடி மேலப்பாளையம் சென்றார். அதே நேரத்தில் கள்ளநோட்டு குறித்து தகவல் அறிந்த போலீசாரும் மேலப்பாளையம் சென்று பால்ராஜ் மற்றும் ஜெயபாலை கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பாக 12 பேரை கைது செய்து நெல்லை டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.